ஜோசப் முகாம் சித்திரவதைகளுடன் தொடர்புடைய மேஜர் ஜெனரல் குலதுங்கவை ஐ.நா மீளாய்வுக்குழுக்கூட்டத்தில் பங்கேற்பதைத் தடுத்து நிறுத்துங்கள்- இனப்படுகொலையைத் தடுத்தல் மற்றும் வழக்குத்தொடர்தலுக்கான சர்வதேச நிலையம்

ஐ.நா. மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் கூட்டத்தில் இலங்கை சார்பில் நிகழ்நிலை முறைமையின் ஊடாகப் பங்கேற்றிருக்கும் அரச பிரதிநிதிகள் குழுவில் அங்கம்வகிக்கும் மேஜர் ஜெனரல் ஜீவக ருவன் குலதுங்க ஜோசப் முகாம் சித்திரவதைகள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டவராவார்.

எனவே, அவரது பங்கேற்பை நிறுத்துவதுடன், அதன்மூலம் கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கு வலுவானதொரு செய்தியைக் கூறுமாறு இனப்படுகொலையைத் தடுத்தல் மற்றும் வழக்குத்தொடர்தலுக்கான சர்வதேச நிலையம் ஐ.நா. மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் லண்டனைத் தளமாகக்கொண்டியங்கும் இனப்படுகொலையைத் தடுத்தல் மற்றும் வழக்குத்தொடர்தலுக்கான சர்வதேச நிலையம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பவை வருமாறு –

எமது அமைப்பு எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி இயங்கிவருவதுடன், இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட தரப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்தி எமது செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றோம்.

குறிப்பாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்பில் பொறுப்புக்கூறல், நீதி, அமைதி, நல்லிணக்கம் என்பன உறுதிப்படுத்தப்படுவதை முன்னிறுத்தி செயலாற்றிவரும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய சுயாதீன விசாரணைக்குழுக்களுக்கு உதவும் வகையில் பாதிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து வாக்குமூலங்களைத் திரட்டி, அவற்றை ஆவணப்படுத்திவருகின்றோம்.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது உங்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் மீளாய்வு செயன்முறையில் இலங்கை சார்பில் நிகழ்நிலை முறைமையின் ஊடாகப் பங்கேற்றிருக்கும் அரச பிரதிநிதிகள் குழுவில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஜீவக ருவன் குலதுங்க தொடர்பாக உங்களுக்கு அறியத்தருகின்றோம். அவர் அரசாங்க பிரதிநிதிகள் பட்டியலில் 11 ஆவதாக பெயரிடப்பட்டுள்ளார்.

இது பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியிலும், சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட தரப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச ரீதியில் இயங்கிவரும் எம்மைப்போன்ற அரசசார்பற்ற, மனித உரிமைகள் அமைப்புக்கள் மத்தியிலும் தீவிர கரிசனையைத் தோற்றுவித்துள்ளது.

கடந்த 2016 நவம்பர் 7 – 2017 ஜுலை 27 வரையான காலப்பகுதியில் குலதுங்க ஜோசப் முகாமுக்குப் பொறுப்பாகக் கடமையாற்றினார். அந்தக் காலப்பகுதியில் ஜோசப் முகாமில் இடம்பெற்ற சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட பலர் தற்போது லண்டனிலும், உலகின் வேறுபல பாகங்களிலும் வசிக்கின்றனர். அவர் இலங்கையின் சார்பில் பங்கேற்றிருக்கும் பிரதிநிதிகள் குழுவில் உள்ளடங்கியிருப்பது கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, அவரது பங்கேற்பை நிறுத்துமாறு நாம் பாதிக்கப்பட்ட தரப்பினரின் சார்பில் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். அதேபோன்று ஜோசப் முகாமில் இடம்பெற்ற சித்திரவதைகளில் அவரது வகிபாகம் என்னவென்பது தொடர்பாகக் கேள்வி எழுப்புமாறும் வலியுறுத்துகின்றோம்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் ஐக்கிய நாடுகள் சபை கூட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றமை நிறுத்தப்படவேண்டும். மனித உரிமைகளுக்கு ஆதரவளிக்கும் எந்தவொரு ஜனநாயகக்கட்டமைப்பிலும் அத்தகைய நபர்களுக்கு இடமில்லை.

எனவே, இம்முறை கூட்டத்தில் குலதுங்கவின் பங்கேற்பை நீக்குவதன் ஊடாக கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையால் வலுவானதொரு செய்தியைக் கூறமுடியும் என்று அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.