தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் முன்மாதிரியான நோயாளர்சேவை நோக்கு! அனைவரும் பெரும் வரவேற்பு

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை ஒரு மீள்குடியேற்றப் பிரதேசத்தில் அமைந்துள்ள வைத்தியசாலை என்பதாலும் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பபாண மாவட்டத்தில் முக்கிய ‘ஏ’ தர ஆதார வைத்தியசாலை என்பதாலும் அங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் காணப்படுகின்றது. அதுவும் தற்போது நாட்டின் பொருளாதார நிலைமை காரணமாக சுகாதாரத் துறை சார்ந்த மருந்துகளின் நினைத்துப்பார்க்கமுடியாத அதியுச்ச விலையேற்றத்தால் நோயாளர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துக் காணப்படுகின்றது.

இந்த நிலையில் அண்மைக்காலமாக நோயாளர்கள் மத்தியில் – அவர்கள் தங்களுக்கான மருத்துவ சேவையைப் பெறுவதில் – பாரிய அசொளகரியங்களை வைத்தியசாலையில் எதிர்நோக்கி, வேறு வழியின்றி மனம் வெந்த நிலையிலேயே வைத்திய சேவையைப் பெற்றபின் வீடு திரும்பிய அவலங்களும் உள்ளன.

இந்த நிலையில் புதிய வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் றெமான்ஸ் பதவியேற்றபின்பு, நோயாளர் சேவையில் என்றும் அர்ப்பணிப்புடனும் – மனிதாபிமான நோக்குடனும் – செயற்படுகின்ற வைத்திய நிபுணர்கள் இணைந்து வைத்தியசாலை முகாமைத்துவ நிர்வாகத்தின் ஊடாக, எந்தச் சிரமமும் இன்றி வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளர்கள் தமது சேவையைப் பெறும் பொருட்டும், அவ்வாறு அவர்கள் தாமதம் அல்லது சிரமம் ஏற்பட்டால் அது எந்த இடத்தில் எவ்வளவு நேரம் ஏற்பட்டது – அதற்குக் காரணமானவர்கள் யார்? என்பதைக் கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முகமாக முன்மாதிரியான திட்டம் – நோயாளர்களால் பெரிதும் பாராட்டப்படுகின்ற திட்டம் – முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் மருத்துவ தேவைகளுக்காக செல்பவர்களிடம் அங்கிருக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தரால் ஒரு விண்ணப்பப்படிவம் வழங்கப்படுகின்றது.

அதில் நோயாளர்கள் வைத்தியசாலைக்கு சென்ற நேரம் நோயாளரால் பதியப்பட வேண்டும் பின்பு அனுமதிச்சிட்டை கிடைத்த நேரம், வைத்தியர் பார்வையிட்ட நேரம், மருந்து வழங்கப்பட்ட நேரம், மற்றும் ஊசி போட வேண்டிய தேவையுடைய நோயாளியாயின் ஊசி போட்ட நேரம் மருந்து கட்ட வேண்டிய நோயாளியாயின் மருந்து கட்டிய நேரம் போன்றவை வைத்தியசாலைக்கு பிரவேசித்ததிலிருந்து வெளியேறும் வரைக்கும் அனைத்து நேரங்களும் பதியப்பட்டு எந்த இடத்தில் கூடிய தாமதம் ஏற்படுகின்றது என்பதும் அதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்ற ஆய்வும் இடம்பெறுகின்றது.

உண்மையில் இது பராட்டப்படவேண்டிய விடயம் எங்கள் மக்கள் மத்தியில் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு சென்றால் கூடிய காலதாமதம் ஏற்படும் என்ற காரணத்துக்காகவே பெரும்பாலானவர்கள் தனியார் வைத்தியசாலைகளுக்கு செல்கின்றனர். இந்த நிலையை மாற்றியமைப்பதற்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நிர்வாகம் எடுத்திருக்கும் இந்த ஒப்புயர்வற்ற செயற்பாடு முன்மாதிரியானதும் பாராட்டப்படவேண்டியதும் ஆகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.