கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக பா.உ முசாரப்பின் கருத்துக்கு பா.உ கலையரசன் பதிலடி!

(சுமன்)
இந்த நாட்டிலே மாறி மாறி ஆட்சியமைக்கின்ற அரசாங்கங்களோடு இணைந்து சில முஸ்லீம் அரசியல்வாதிகள் போர்ச்சூழலை அனுபவித்த எமது தமிழ் சமூகத்திற்கு இந்த நாட்டிலே எவ்வித நியாயமும் கிடைக்கப்படாது என்ற சூழ்நிலைகளைப் பயன்படுத்தி எமது சமூகத்திற்கான அதிகாரங்களை முடக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது தான் உண்மை. அதுவே கல்முனை வடக்கு விடயத்திலும் இடம்பெறுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணையில் உரையாற்றும் வேளையில் பாராளுமன்ற உறுப்பினர் முசாரப் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் கல்முனை வடக்கு சம்மந்தமான உரையை மறுதளித்துப் பேசியமைக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வாக்குரிமை என்பது ஜனநாயக ரீதியான ஒரு உரிமையாகும். இந்த நாட்டில் தொடர்ச்சியாக சந்தர்ப்பவாத சூழ்நிலைகளைப் பயன்படுத்தி தேர்தல்களை ஒத்திவைக்கின்ற நடவடிக்கைகளே தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

தற்போதுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் காலம் எதிர்வரும் 19ம் திகதி முடிவுற இருக்கின்றது. அந்த சூழலையெல்லாம் அறிந்து அதற்கு முன்னதாக இந்தத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அதற்குரிய பணிகள் எல்லாம் முன்னெடுக்கப்பட்டும் இருந்தன. ஆனால் இந்த நாட்டில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஒரு கருத்து, பிரதமர் ஒரு கருத்து அதேபோன்று ஜனாதிபதி ஒரு கருத்து என மாறுபட்ட கருத்துகளோடு இந்தத் தேர்தல் தற்போது பிற்போடுகின்ற சூழ்லே இருந்து கொண்டிருக்கின்றது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலாக இருக்கலாம் அல்லது இந்த நாட்டின் சிறுபான்மை சமூகத்தின் அதிகாரப் பகிர்வாகக் கொண்டு வரப்பட்ட பதின்மூன்றாவது திருத்தத்தின் மாகாணசபை அதிகாரத்தைக் கூட நடைமுறைப்படுத்துவதில் கூட இந்த நாட்டின் பெரும்பான்மை அரசியற் தலைமைகள் விருப்பமில்லாத நிலைமையே இருந்துகொண்டிருக்கின்றது.

இந்த நாட்டில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. ஏற்கனவே 2022ம் ஆண்டு நடைபெற வேண்டிய இந்தத் தேர்தல் அப்போது ஒருவருடம் நீடிக்கப்பட்டும் இன்றும் இத்தேர்தல் நடக்குமா நடக்காதா என்ற இழுபறியில் இருக்கின்றது.

நாட்டிலே பொருளாதார ரீதியான பிரச்சனை இருக்கின்றதென்பதனை யாரும் மறுக்கவே முடியாது. இந்த பொருளாதார நிலைமைக்கேற்றால் போல் இந்த நாட்டின் தலைவர்கள் ஒரு தீர்மானத்தைச் சரியாக எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு எடுக்காமல் இன்று பொருளாதாரம் பற்றிப் பேசுகினற ஒவ்வொருவரும் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பிற்பாடு எவ்வளவு பொருளாதாரம் இழக்கப்பட்டிருக்கின்றது என்பதையும் சிந்திக்க வேண்டும்.

இந்தத் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு ஒரு புறம் நிதியில்லை என்ற விடயம் பேசப்பட்டாலும், மறுபுறம் இந்த நாட்டிலே மாற்றுத் தீர்வு ஏற்பட்டு விடும் என்ற அச்சமே அரச தரப்பு தலைவர்களிடம் இருக்கின்றதென்ற உண்மைச் செய்தியையும் அனைவரும் அறிவர்.

இன்று இந்த நாட்டில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெற வேண்டும் என்ற அடிப்;படையில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், அதனை நாங்கள் வரவேற்பதோடு இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்ற எதிரணியினர் உட்பட அனைவரும் இந்த நாட்டில் மாகாணசபை என்ற ஒன்று இல்லை என்கின்ற அளவிற்கு நிருவாக நடைமுறை நடந்து கொண்டிருக்கின்றது என்பதையும் சிந்திக்க வேண்டும்.

குறிப்பாக இந்த நாட்டின் ஒவ்வொரு மாகாணசபையும் ஐந்து வருடங்களுக்கு மேலாக மக்கள் மன்றம் என்று ஒன்றில்லாது நிருவாக ரீதியாக சீர்கேடுகள் பல இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. மாகாணத்தில் இடம்பெறுகின்ற விடயங்களைச் சீர்தூக்கிப் பாhத்து மேற்கொள்ள முடியாத நிலை இருக்கின்றது. எங்கு பார்த்தாலும் காணிப் பிரச்சினை மேய்ச்சற்தரைப் பிரச்சனை என பல விடயங்கள் எங்களுடைய கிழக்கு மாகாணத்தில் இருந்து கொண்டிருக்கின்றது.

அது அப்படியே இருக்க உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பிலும் புதிய எல்லை நிர்ணயம் என்ற விடயம் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. தற்போதைய நடைமுறையில் உள்ள தேர்தல் முறையானது 2018ம் ஆண்டு பரீட்சார்த்தமாகக் கொண்டு வரப்படடு உள்ளுராட்சி மன்றங்களிலே பல குழறுபடிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. தற்போது புதிதாகக் கொண்டு வரப்பட இருக்கின்ற வட்டாரங்களைக் குறைத்து உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் குறைக்கின்ற தீர்மானம் மாவட்ட உள்ளுராட்சி ரீதியில் இருக்கின்ற சிறுபான்மையினருக்கு நிச்சயமாக பாதிப்பைத் தரக் கூடிய விடயமாகவே இருக்கும்.

நாங்கள் பல விடயங்களைத் தேர்தல்கள் ஆணையாளரோடும், அரச அதிபரோடும் பேசியிருக்கின்றோம். ஆனால் முன்னேற்றகரமான செயற்பாடுகள் எதனையும் நாங்கள் காணவில்லை. எனவே புதிய முறையில் வருகின்ற தேர்தலும் இலஞ்ச ஊழலை ஊட்டுகின்ற ஒரு தேர்தலாகவே அமையும். இருக்கின்ற வட்டாரங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன பெரும்பான்மையாக வெல்லக் கூடிய கட்சி அங்கு ஆட்சி அதிகாரங்களைச் செலுத்த முடியாத சூழல் உருவாக்கப்படும்.

இது இவ்வாறு இருக்க கௌரவ உறுப்பினர் முசாரப் அவர்கள் பாராளுமன்றிலே கல்முனை விடயம் சம்மந்தமாக கௌரவ சாணக்கியன் அவர்கள் அடிப்படையில் இல்லாத விடயங்களைப் பேசியதாக ஒரு கருத்தை முன்வைத்திருந்தார். இதற்குப் பதிலளிக்க வேண்டிய நிலைப்பாட்டில் உள்ளேன்.

கௌரவ உறுப்பினர் அவர்களே, கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் என்பது 1989ம் ஆண்டு தொடக்கம் 1993ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் உப பிரதேச செயலகமாக இருந்தது. ஆனால் தற்பேது அது 1993.07.28ம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டு விட்டது. ஆனால் இந்த நாட்டிலே மாறி மாறி ஆட்சியமைக்கின்ற அரசாங்கங்களோடு இணைந்து சில முஸ்லீம் அரசியல்வாதிகள் இது உங்கள் சமூகத்தின் பிரச்சனை அல்லாமல் இருந்தாலும் கடந்த முப்பது வருட காலமாக போர்ச்சூழலை அனுபவித்த எமது தமிழ் சமூகத்திற்கு இந்த நாட்டிலே எந்தவிதமான நியாயமும் கிடைக்கப்படாது என்ற சூழ்நிலைகளையெல்லாம் பயன்படுத்தி எமது சமூகத்திற்கான அதிகாரங்களை முடக்கிக் கொண்டிருக்கின்றீர்கள் என்பது தான் உண்மை.

1993.07.28ம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானம் எங்கள் கைகளிலே இருக்கின்றது. நாங்கள் ஒரு முடிவை எடுத்திருக்கின்றோம். ஆனால், எந்த இனமாக இருந்தாலும சரி நாங்கள் சமூக ரீதியாகப் பிளவுகளை ஏற்படுத்துகின்ற எந்த அரசியலையும் ஒருபோதும் முன்னெடுக்க மாட்டோம். இந்த நாட்டிலே நாங்கள் இப்போது அரசியலைச் செய்து விட்டு வெளியேறி விடலாம். ஆனால், சிங்கள மக்களும் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் இந்த நாட்டிலே நிலையாக வாழத்தான் போகின்றார்கள்.

எனவே இந்த கல்முனை விடயம் என்பது திட்டமிட்ட ஒரு சதி. இந்த நாட்டின் தலைவருக்கும், பிரதமருக்கும் அது தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியாத சூழல். ஏனெனில் எந்த அரசாங்கம் வந்தாலும் அவர்களுக்குச் சாதகமாகக் கைகளை உயர்த்தி அமைச்சுப் பதவிகளை எடுக்;கின்ற விடயமே இடம்பெற்று வந்திருக்கின்றது. எனவே எதிர்காலத்திலாவது மக்கள் இந்த சமூகங்களை இணைத்து பயணிக்கக் கூடிய அரசியல்வாதிகளை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.