500 மில்லியன் டொலர்கள் கடந்த வாரம் சந்தைக்கு!

கடந்த ஏழு நாட்களுக்குள் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சந்தைக்கு வந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கைவசம் வைத்திருக்கும் டொலர்களை ரூபாயாக மாற்றுவதற்கு பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பொது மன்னிப்புக் காலத்தின் போது டொலர் 365 மற்றும் 370 க்கு இடையில் வர்த்தகம் செய்யப்பட்ட போதிலும், 30 மில்லியன் டொலர்கள் மாத்திரமே சந்தைக்கு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கறுப்புச் சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் மத்திய வங்கியின் ஆலோசனைக்கு செவி சாய்த்திருந்தால், அவர்கள் தங்கள் டொலர்களுக்கு அதிக விலையைப் பெற்றிருப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், ரூபாயின் பெறுமதி உயர்வடைய ஆரம்பித்ததில் இருந்து,சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சந்தைக்கு வந்துள்ளதாக ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.