உள்ளூராட்சிமன்றத் தேர்தலை மீண்டும் பிற்போடும் சாத்தியம் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமை கவலைக்குரியதாக உள்ளது – ரோஹன ஹெட்டியராச்சி

வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளில் தாமதம், நாளை மறுதினம் முதல் நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள தொழிற்சங்க போராட்டம் உள்ளிட்ட காரணிகளினால் தபால்மூல வாக்கெடுப்பை பிற்போட்டு, உள்ளூராட்சிமன்றத் தேர்தலை மீண்டும் பிற்போடுவதற்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுகிறது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடையுத்தரவுக்கு அப்பாற்பட்ட வகையில் ஜனாதிபதி செயற்படுகிறார்.நிதி விடுவிப்பு விவகாரத்தில் இறுதி தீர்மானத்தை நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு திறைசேரியின் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டு அல்ல,நாட்டில் தேர்தல் என்பதொன்று இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார்.தேர்தலுக்கு ஆளும் தரப்பினர் தயாராக இல்லாத காரணத்தினால் அவர்கள் தேர்தல் குறித்து அக்கறை கொள்ளவில்லை.

பொருளாதார பாதிப்பு காரணமாக தேர்தலை பிற்போட்டால் எதிர்வரும் காலங்களில் தேர்தல்களை நடத்துவது நிச்சயமற்றதாகி விடும்.தேர்தலை நடத்தியதால் எந்த நாடும் வங்குரோத்து நிலை அடையவில்லை,வங்குரோத்து நிலையில் இருந்து மீள வேண்டுமாயின் மக்களாணையுடன் புதிய அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும்.

நிதி வழங்கினால் வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவோம் என்ற தர்க்கத்தை அரச அச்சகத் திணைக்களம் மீண்டும் முன்வைத்துள்ளது.தபால்மூல வாக்கெடுப்பை எதிர்வரும் 28,29,30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் ஒருவாரம் இடைவெளி உள்ள நிலையில் நிதி இல்லை என்ற தர்க்கம் முன்வைக்கப்படுகிறது.

நிதி நெருக்கடி என்று குறிப்பிட்டுக் கொண்டு வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகள் தாமதப்படுத்தப்படுகின்றன.மறுபுறம் நாளை மறுதினம் முதல் தொழிற்சங்க போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.இவ்வாறான காரணிகளினால் தபால்மூல வாக்களிப்பை பிற்போட்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தலை மீண்டும் பிற்போடுவதற்கான சாத்தியம் காணப்படுகிறது.

தேர்தலை நடத்த கூடாது என்று உறுதியான நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு செயற்பட்டால் ஒரு சிறந்த தீர்மானத்தை எடுக்க முடியாது,தேர்தலை நடத்துவதற்கு திகதி நிர்ணயிப்பதும்,நிதி நெருக்கடி என்று குறிப்பிட்டுக் கொண்டு தேர்தலை பிற்போடுவதும் என்று இருந்தால் தேர்தல் தொடர்பில் நாட்டு மக்களின் நம்பிக்கை சிதைவடையும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.