உள்ளூராட்சிமன்றத் தேர்தல் விவகாரம் : எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்றிணைத்து சர்வகட்சி கூட்டம் நடத்த அவதானம் – திஸ்ஸ விதாரன

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை தொடர்ந்து பிற்போடும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து சர்வ கட்சி தலைவர் மாநாட்டை நடத்த எதிர்பார்த்துள்ளோம் என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவுக்கு அப்பாற்பட்ட வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்படுகிறார். வாக்கெடுப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதியை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பிய கடிதத்துக்கு திறைச்சேரியின் செயலாளர் வழங்கியுள்ள பதில் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை.

நிதி விடுவிப்பு தொடர்பில் நிதியமைச்சரின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என திறைசேரியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். நிதியமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி வகிக்கிறார். ஆகவே அவர் தேர்தலுக்கு நிதி ஒதுக்குவார் என்று குறிப்பிட முடியாது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை தொடர்ந்து பிற்போடும் அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டுக்கு சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அதற்காக சகல எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் கட்சித் தலைவர் கூட்டத்தை நடத்த எதிர்பார்த்துள்ளோம்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழிக்க முயற்சிக்கிறார். கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயார். ஆனால் நாடு என்ற ரீதியில் தேர்தலுக்கு தயார் இல்லை என ஆளும் தரப்பினர் குறிப்பிடுவது வேடிக்கையாக உள்ளது என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.