ஜனாதிபதி ஜனநாயக விரோத செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார் – கஜேந்திர குமார்

அண்மைக்காலமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அங்கீகாரம் இல்லாத, மக்கள் நிராகரிக்கப்பட்ட ஆட்சியை தக்கவைப்பதற்காக இராணுவத்தைப் பயன்படுத்துகிறார் எனவும், ஜனநாயக விரோத செயற்பாடுகளை மேற்கொண்டு வருவகிறார் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

காரைநகரில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் இதனைத் தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில் –

அண்மையில் இராணுவ உடையை அணிந்திருப்பது போல் சீருடை அணிந்திருந்து கொண்டு, இராணுவத்துக்கு தொடர்பில்லாத தடிகள் போன்ற ஆயுதங்களை வைத்துக்கொண்டு பொதுமக்கள் ஜனநாயக வழியில் போராடுகின்ற போது தாக்குகின்ற சம்பவங்கள் அம்பலமாகியுள்ளன.

இன்றைக்கு சர்வதேச ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதிலே முக்கியமாக நாங்கள் சுட்டிக் காட்டவேண்டிய விடயம், தற்போது இராணுவம் என்ற பெயரில் அரசாங்கம் வந்து காடையர் கும்பல்களை வைத்துக்கொண்டு செயல்படுகின்ற ஒரு நிலைமையாக தான் நாங்கள் பார்க்கின்றோம்.

இராணுவத்தை கேள்விகள் கேட்கின்ற போது அந்த தடிகளோடு உள்ள நபர்கள் இராணுவத்தோடு தொடர்பில்லாதவர்கள் எனக் கூறப்பட்டிருக்கின்ற சூழலில் அந்த தரப்பை அரசாங்கம் வந்து ஜனநாயக அடிப்படையிலே செயற்படுகின்ற மக்களுக்கு எதிராகக் கட்டுவீழ்த்தி இருக்கின்ற ஒரு நிலையிலே, இன்றைக்கு அப்படிப்பட்ட ஒரு குண்டர்கள், இராணுவத்துடைய புலனாய்வு இயங்கிக் கொண்டிருக்கின்ற சூழலிலும் இராணுவத்துக்குத் தெரியாமல் செயற்படுவதாக இருந்தால் அது இந்த நாட்டினுடைய தேசிய பாதுகாப்பிற்கு ஒரு கடும் அச்சுறுத்தல் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் அப்படி நடக்கின்ற ஒரு பின்னணியிலேயே இராணுவம் ஒரு பலவீனமான கட்டமைப்பாக இருக்கிறதாக நாங்கள் கூற முடியாது. இன்றைக்கு இந்த நாட்டின் வரவு – செலவுத் திட்டத்தில் கிட்டத்தட்ட 20 வீதம் இராணுவத்துக்காக ஒதுக்கப்படுகின்றது. இவ்வாறான நிலையில் இராணுவத்துக்கு தன்னுடைய செயறபாட்டை சரியான முறையில் செய்வதற்கு நிதியில்லை என்று கூட சொல்ல முடியாது.

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற போராட்டத்தில் காலாவதியான கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டு இருவர் உயிரிழந்துள்ளனர். இது ஜனநாயகமற்ற ஒரு செயல். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.