மனித உரிமைகள், பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுக்கள் அரசியல் நோக்கத்துடன் செயல்படுகின்றன – காஞ்சன விஜேசேகர

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு ஆகியன அரசியல் நோக்கத்துடன் செயற்படுகின்றன.

நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சங்க போராட்டத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஏன் மனித உரிமைகள் மீறலாகக் கருதவில்லை என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

மினுவாங்கொட பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

எமது அரசாங்கம் வழங்கிய ஒரு சில நியமனங்கள் இன்று அரசாங்கத்துக்கு எதிராகக் காணப்படுகின்றன. விசேடமாக இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவரை குறிப்பிட வேண்டும். இவர் அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறார்.

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் முறையாக செயற்பட்டிருந்தால் கடந்த ஆண்டின் இறுதியில் நாட்டில் மின்விநியோகக் கட்டமைப்பில் பாதிப்பு ஏற்பட்டிருக்காது.

பிரச்சினைகளைத் தீவிரப்படுத்தி ஆணைக்குழுவுக்கும், அமைச்சுக்கும் இடையில் பிரச்சினைகளைத் தோற்றுவித்தார். எதிர்காலத்தில் இவர் ஏதாவதொரு அரசியல் கட்சியின் உறுப்பினராகப் பதவி வகிப்பார்.

மறுபுறம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அரசியல் நோக்கத்துடன் செயற்படுகிறது. உயர்தர பரீட்சை இடம்பெறும் காலத்தில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்ட போது அதனை மனித உரிமைகள் மீறலாகக் கருதி பேச்சுவார்த்தையை மேற்கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழு தற்போது அமைதியாக இருப்பது வேடிக்கையாக உள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணிகளில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டுக் கொண்டு இலங்கை ஆசிரியர் சங்கம் முரண்பாடுகளைத் தோற்றுவித்துள்ளது.

இதனை மனித உரிமைகள் ஆணைக்குழு ஏன் மனித உரிமை மீறல் செயற்பாடாகக் கருதவில்லை. நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சங்கப் போராட்டத்தை மனித உரிமைகள் ஆணைக்குழு ஏன் மனித உரிமைகள் மீறலாகக் கருதவில்லை. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.