பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டு நாட்டை அராஜகமாக்கினால் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டிவரும் – வஜிர எச்சரிக்கை

பணி பகிஷ்கரிப்பு மேற்கொண்டு நாட்டை அராஜகமாக்க நடவடிக்கை எடுத்தால் அதற்கு சம்பந்தப்பட்ட அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும்.

நாடு அராஜகமானால் 25வருடங்களுக்கு மீண்டும் கட்டியெழுப்ப முடியாமல் போகும் . அதனால் நாடு அராஜகமாகுவதை தடுப்பதற்கு அரசாங்கம் பின்வாகப்போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் வரி அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் இன்று பணி பகிஷ்கரிப்பு போராட்டம் மேற்கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறது.

என்றாலும் இவர்களின் போராட்டம் வெற்றிபெறப்பாேவதி்ல்லை. அது தொடர்பில் அச்சப்படத் தேவையில்லை. ஏனெனில் தொழிற்சங்க போராட்டத்தில் கலந்துகொள்வதாக ஏற்கனவே அறிவித்திருந்த பல தொழிற்சங்கங்கள் தற்போது அந்த தீர்மானத்தில் இருந்து விலகியிருப்பதாக அறிவித்திருக்கின்றன.

இருந்தபோதும் தொழிற்சங்க போராட்டம் மேற்கொண்டு நாட்டை அராஜகமாக்க நடவடிக்கை எடுத்தால் அதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் பொறுப்புக்கூற வேண்டும்.

நாடு அராஜகமாகினால் 25வருடங்களுக்கு மீண்டும் நாட்டை கட்டியெழுப்ப முடியாமல் போகும். இதனை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். அரசாங்கத்தின் புதிய வரி அதிரிப்புக்கு நூற்றுக்கு 3வீதமானவர்களே ஆளாகப்போகின்றனர்.

ஆனால் அதற்கு எதிராக 97வீதமானவர்கள் வீதிக்கிறங்கி, அந்த வரியை இல்லாமலாக்க போராடினால் சாதாரண மக்களே பாதிக்கப்படுவார்கள்.

இதனை சாதாரண மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். ஒரு இலட்சம் ரூபாவுக்கு அதிக சம்பளம் பெறுபவர்களிடம் அறவிடப்படும் இந்த வரி, தற்காலிகமானது. சில மாதங்களுக்கு பின்னர் அது ரத்துச்செய்யப்படும் என ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் நாடு வீழ்ச்சியடைந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்தது ரணில் லிக்ரமசிங்கவாகும்.

தற்போதும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை கட்டியெழுப்பவே ரணில் விக்ரமசிங்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன்போது சில தீர்மானங்களை எடுக்கும்போது அது கஷ்டமாக இருக்கும்.

என்றாலும் நாங்கள் அனைவரும் இதனை கொஞ்ச காலத்துக்கு பொறுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. கடந்த 7,8 மாதங்களுக்கு முன்னர் நாடு எந்த நிலையில் இருந்தது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.

முழு நாடு அராஜக நிலையில் இருந்தபோது நாட்டை பொறுப்பேற்று நடத்த யாரும் முன்வராத நிலையிலேயே ரணில் விக்ரமசிங்க முன்வாந்தார்.

அதனால் வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நாங்கள் அனைவரும் அவருக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மேலும் வீழ்ச்சியடைந்திருக்கும் நாட்டை படிப்படியாக முன்னேற்றி, சுமுக நிலையை ஏற்படுத்திவரும் இந்த சந்தர்ப்பத்தில், நாட்டில் பணிபகிஷ்கரிப்பு போராட்டங்களை மக்கள் எதிர்க்க வேண்டும். போராட்டக்கார்களுக்கு எதிராக மக்கள் வீதிக்கிறங்க வேண்டும்.

அதேபோன்று மக்களின் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படும் வகையில் போராட்டம் மேற்கொள்பவர்களை அத்தியாவசிய சேவை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

அத்துடன் அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத வகையில் தடை செய்ய வேண்டும் நாட்டை அராஜக நிலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தால் அதனை பாதுகாக்க அரசாங்கம் முறையாக நடவடிக்கை எடுப்பதற்கும் பின்வாங்கப்போவதில்லை என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்