தேர்தல்கள் ஆணைக்குழுவை விசாரணை செய்ய ஆளும் தரப்பு சபாநாயகரிடம் கோரிக்கை – ஜி.எல்.பீரிஸ்

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட உறுப்பினர்களை நாடாளுமன்றத்துக்கு அழைத்து அவர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஆளும் தரப்பின் 14 உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

தேர்தலை பிற்போட அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் முத்துறைகளுக்கும் இடையில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்றிருந்தால் சிறந்த அரசியல் மாற்றத்துக்கான ஆரம்பம் தோற்றம் பெற்றிருக்கும், இதனால் தான் அரசாங்கம் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்பட்டு வருகிறது.

தேர்தலை பிற்போடும் முயற்சிகளை அரசாங்கம் கைவிடாமல் வெட்கமில்லாமல் செயற்படுகிறது. தேர்தலை பிற்போட பல்வேறு சூழ்ச்சிகள் இன்றும் முன்னெடுக்கப்படுகின்றன.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட உறுப்பினர்களை நாடாளுமன்றத்துக்கு அழைத்து அவர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஆளும் தரப்பின் 14 உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

சுயாதீன ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் ஆளும் தரப்பினர் செயற்படுகிறார்கள்.

நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க தேர்தல்கள் ஆணைக்குழு முறையாக செயற்படுகின்ற நிலையில் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு ஏற்பட்டுள்ள தடைகள் தொடர்பில் சபாநாயகர் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

நிதி விடுவிப்பு தொடர்பில் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளை நாடாளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அழைக்குமாறு ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளமை பாரதூரமானது. நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவை இடைநிறுத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்குக் கிடையாது.

நாடாளுமன்றத்தின் சிறப்புரிமை ஊடாக நாட்டின் நீதித்துறையை கேள்விக்குள்ளாக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதை ஆளும் தரப்பினர் தவிரத்துக்கொள்ள வேண்டும்.

நாட்டின் முத்துறைகளுக்கும் இடையில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றால் முழு நாடும் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.