போராட்டங்களினால் அரசாங்கத்தை வீழ்த்த முடியாது – எஸ்.எம்.சந்திரசேன

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான எமது அரசாங்கத்தை போராட்டங்களால் வீழ்த்த முடியாது, சகல போராட்டங்களையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்.

தொழிற்சங்கத்தினர் நாட்டுக்கு எதிராக செயற்படுகிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

ஒட்டுமொத்த மக்களும் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டிருக்கும் பின்னணியில் தமக்கான கொடுப்பனவுகள் முழுமையாக கிடைக்கப் பெற வேண்டும், வரி விதிக்க கூடாது என்று சுயநலமான கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கத்தினர் பணி புறக்கணிப்பில் ஈடுபடுகிறார்கள்.

முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை, பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என தொழிற்சங்க பிரதிநிதிகள் குறிப்பிடுகின்றமை அடிப்படையற்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பலமுறை பேச்சில் ஈடுபட்டார். பொருளாதார மீட்சிக்காகவே புதிய வரி கொள்கை அமுல்படுத்தப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றதும் ஆறு மாத காலத்துக்குள் வரி கொள்கை திருத்தம் செய்யப்படும். ஆகவே சற்று ஒத்துழைப்பு வழங்குங்கள் தேசிய வருமானம் முன்னேற்றமடைந்தவுடன் அதன் பயன் அரச சேவையாளர்களுக்கு நிச்சயம் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணி;ல் விக்கிரமசிங்க தொழிற்சங்க பிரதிநிகளிடம் வலியுறுத்தினார்.

பொருளாதார மீட்சிக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த தீர்மானங்களால் எவ்வித மாற்றங்களும் ஏற்படாமல் இருந்தால் தொழிற்சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபடுகின்றமை நியாயமானது.

காலி முகத்திடல் போராட்டக்களத்தில் போராடி நாட்டை பாரிய நெருக்கடிக்குள்ளாக்கிய தரப்பினர் தான் தற்போதும் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான எமது அரசாங்கத்தை போராட்டங்களால் வீழ்த்த முடியாது. சகல போராட்டங்களையும்,சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்.

தொழிற்சங்கத்தினர் நாட்டுக்கு எதிராகச் செயற்படுகிறார்கள், நாட்டு மக்கள் இவர்களைப் புறக்கணிக்க வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.