தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு தோல்வி ; ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர்

தொழிற்சங்கங்களின் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் தோல்வியடைந்துள்ளது. 80 வீதத்துக்கும் அதிகமான சேவைகள் வழமைபோன்று இடம்பெற்றன.

போராட்டத்தில் அரசியல் நோக்கம் இருந்தமையே இதற்குக் காரணமாகும். என்றாலும் சுயாதீன தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளில் நியாயம் இருக்கிறது.

அவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தி இருக்கிறார் என ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

தொழிற்சங்கங்கள் புதன்கிழமை மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்பாக ஜனாதிபதி தொழிற்சங்க பணியகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

பாரிய தொழிற்சங்க போராட்டம் மேற்கொள்வதாக ஒருசில தொழிற்சங்கங்கள் அறிவிப்பு செய்திருந்தன. இவர்களின் கோரிக்கையாக இருந்தது, வரி அதிகரிப்பு, பொருள்களின் விலை அதிகரிப்பு, சேவை கட்டணங்களின் அதிகரிப்பு போன்ற விடயங்களாகும்.

இவர்களின் கோரிக்கை நியாயமானதாகும். நாடு வங்குரோத்து அடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்படுகிறது.

வருமானத்தை தேடிக்கொள்ள வரி அதிகரிக்க வேண்டி ஏற்படுகிறது. பணம் அச்சிட வேண்டி ஏற்படுகிறது. இவ்வாறான நிலையில் பொருளாதார நிலையில் மக்களுக்கு பாரிய பிரச்சினை ஏற்படுகிறது.

என்றாலும் இந்தப் பிரச்சினைகளைத் தற்போது குறிப்பிடத்தக்க அளவில் தீர்த்திருக்கிறோம். தற்போது இந்தப் பிரச்சினைகளை முகாமைத்தும் செய்துவரும் நேரமாகும்.

அத்துடன் கடந்த 7,8 மாதங்களுக்கு முன்னர் நாடு எவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொண்டது என்பது அனைவருக்கும் தெரியும். காலையில் எரிவாயு வரிசை மாலையில் எரிபொருளுக்கான வரிசையில் இருக்கவேண்டி இருந்தது.

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்தியாவின் யாசகர்கள் பணம் சேகரித்து இலங்கை மக்களுக்கு அனுப்பும் நிலை இருந்தது.

இவ்வாறான பாரிய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கே நாங்கள் முகம்கொடுத்திருந்தோம். என்றாலும் தற்போது இந்தப் பிரச்சினைகள் எவையும் இல்லை. அனைத்துப் பிரச்சினைகளும் முகாமைத்துவம் செய்யப்பட்டிருக்கின்றன.

இவ்வாறான நிலையில் தொடர்ந்து எமது பொருளாதாரத்தை முகாமைத்தும் செய்துகொள்ள சர்வதேசத்தையும் முகாமைத்துவம் செய்துகொள்ள வேண்டி இருக்கிறது. அதேபோன்று சர்வதேச நாணய நிதியத்தையும் முகாமைத்துவம் செய்துகொள்ளவேண்டி இருக்கிறது.

அதன் பிரகாரம் சர்வதேச நாணய நிதியத்துடன் நாங்கள் செய்துகொண்டுள்ள இணக்கப்பட்டை எதிர்வரும் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபைக்கு சமர்ப்பித்து, அதற்கான அனுமதி கிடைக்க இருக்கிறது.

அதனால் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை குழப்புவதற்கான திட்டமாகவே தொழிற்சங்கப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அவ்வாறு இல்லை என்றிருந்தால் இவர்களுக்கு இந்தப் போராட்டத்தை 20 ஆம் திகதிக்குப் பின்னர் மேற்கொள்ளலாம். 15 ஆம் திகதி போராட்டம் மேற்கொள்வதன் மூலம் இவர்களின் கோரிக்கைகள் ஏதாவது நிறைவேற்றப்படுமா? இல்லை.

அதனால் இது அரசியல் ரீதியிலான பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் என்பது தற்போது தெளிவாகி இருக்கிறது. இந்தப் போராட்டத்துக்கு பின்னால் மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் முன்னிலை சோசலிச கட்சியே பிரதானமாக இருக்கின்றன. என்றாலும் இவர்களுடன் சுயாதீன தொழிற்சங்கங்கள் பல இந்தப் போராட்டத்தில் இருக்கின்றன.

இவர்களுக்கு உண்மையில் பிரச்சினை இருக்கின்றன. இவர்களின் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி மௌனம் செலுத்தி வருகிறார்.

என்றாலும் இவர்கள் அரசியல் கட்சிகளுடன் இணையாமல் வேறு ஒரு தினத்தில் தனித்து போராட்டம் செய்திருந்தால், இவர்களின் உண்மையான பிரச்சினை வெளியில் வந்திருக்கும். இதனால் இவர்களின் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் தோல்வியடைந்திருக்கிறது.

ஏனெனில் இன்றைய தினம் பாரிய பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் என அறிவிக்கப்பட்டிருந்தபோதும், நாட்டில் என்.எஸ்.பி. வங்கி கிளைகள் 265 இருக்கின்றன.

அதில் சுமார் 190 கிளைகள் திறக்கப்பட்டிருந்தன. அதேபோல் மக்கள் வங்கி 325 பிரதான கிளைகள் திறக்கப்பட்டிருந்தன. இலங்கை வங்கியில் நூற்றுக்கு 80 வீதம் செயற்பட்டிருக்கின்றன.

அத்துடன் ரயில் சேவையில் 86 தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. அதில் சாரதிகள் சங்கமும் மக்கள் விடுதலை முன்னணியின் சங்கமுமே பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருக்கின்றன.

துறைமுகத்தில் ஜே.சி.டி தவிர அனைத்து பிரிவும் சேவையில் ஈடுபட்டுள்ளன. போக்குவரத்து துறை நூறுவீதம் சேவையில் ஈடுபட்டது.

பெற்றோலியம் மற்றும் மின்சார சபை ஊழியர்கள் போராட்டம் மேற்கொண்டார்கள். அவர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடவில்லை. இந்தப் போராட்டம் அரசியல் ரீதியிலானது என்பதைத் தொழிலாளர்கள் அறிந்துகொண்டுள்ளனர் என்பதே இதற்குக் காரணமாகும்.

அத்துடன் ஒரு லட்சத்து 10ஆயிரம் ரூபாவுக்கு அதிக சம்பளம் பெறுபவர்களிடமிருந்தே புதிய வரி அறவிடப்படுகிறது. இவர்களிடமிருந்து வரியாக 600 ரூபாவே அறவிடப்படுகிறது.

ஒரு லட்சத்து 50ஆயிரம் சம்பளமாக பெறுபவர்களிடமிருந்து 3,500 ரூபாவே வரியாக அறவிடப்படுகிறது. இது பாரியதொரு தொகை என யாரும் கூறமாட்டார்கள்.

இந்த வரிக்கு அரச சேவையில் இருக்கும் 11 லட்சத்து 16 ஆயிரத்து 855 பேரில் 35 ஆயிரத்து 388 பேரே உள்ளடங்குகின்றனர். அதாவது நூற்றுக்கு 3.16 வீதமானவர்களாகும். இந்த வரி நிரந்தரமானது அல்ல. இன்னும் சில மாதங்களில் இதில் திருத்தம் மேற்கொள்ளப்படும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.