பாக்கு நீரிணை கடல் பகுதியை கடந்து சாதனை படைத்த முதல் பெண்

தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு நீந்தி வந்து மீண்டும் தனுஷ்கோடிக்கு நீந்தி பாக்கு நீரிணை கடற்பகுதியை கடந்த முதல் பெண் என்ற சாதனையை இந்தியப் பெண் படைத்துள்ளார்.

பாக்கு நீரிணை கடல் பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். ராமேஸ்வரம் தீவும், அதனைத் தொடர்ந்துள்ள 13 மணல் தீடைகளும், பாக்கு நீரிணை கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்து பிரிக்கிறது. தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெல்லி மீன்கள் நிறைந்த கடற்பகுதியும் இதுவே ஆகும்.

இதுவரை 4 பெண்கள் உட்பட 18 பேர் பாக்கு நீரிணையை தனியாக நீந்தி கடந்து சாதனை புரிந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடிக்கோ அல்லது தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கோ நீந்திச் சென்றவர்கள். இது தவிர மேலும் சிலர் குழுவாக ரிலே மற்றும் மாரத்தான் முறையிலும் பாக்கு நீரிணை கடலை நீந்தி கடந்துள்ளனர்.

ஆனால், ஓர் இடத்திலிருந்து புறப்பட்டு மறுபுறத்தை அடைந்த பின்பு தொடர்ச்சியாக மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு தொடங்கிய இடத்துக்கே வந்து சாதனை புரிந்தவர்கள் 3 பேர் மட்டுமே. அதில் முதலாமானவர், யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறையை சேர்ந்த வி.எஸ்.குமார் ஆனந்தன். இவர் 1971 ஆம் ஆண்டு தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி வந்து மீண்டும் தலைமன்னாருக்கு நீந்தி வந்தடைந்தார். மொத்தம் தூரத்தை 51 மணி நேரத்தில் நீந்திக் கடந்தார்.

அதன் பின்பு இதே சாதனையை 11.4.2021 இல் இலங்கை கடற்படையைச் சேர்ந்த ரோஷான் அபேசுந்தர 28 மணி 19 நிமிடங்களில் நிகழ்த்தினார். கடந்த 29.03.2022 அன்று தமிழ்நாட்டில் தேனியைச் சேர்ந்த பள்ளி மாணவனான சினேகன் தனது 14 ஆவது வயதில் 19 மணி 45 நிமிட நேரத்தில் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு நீந்தி சென்று மீண்டும் தனுஷ்கோடிக்கு நீந்தி சாதனை படைத்தார்.

முன்னதாக பெங்களூரை சேர்ந்த தொழில்முறை நீச்சல் வீராங்கனையான சுஜேத்தா தேப் பர்மன் (வயது – 40) தனுஷ்கோடியிலிருந்து இலங்கையிலுள்ள தலைமன்னார் நீந்தி சென்று அங்கிருந்து மீண்டும் தனுஷ்கோடிக்கு வரையிலும் உள்ள பாக்கு நீரிணை கடற்பரப்பை இருபுறமாக நீந்தி கடப்பதற்கான சாதனையை முன்னெடுத்தார். இவர் கடந்த வருடம் மார்ச் மாதம் காலை 8.23 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனையிலிருந்து நீந்த ஆரம்பித்து 10 மணி 9 நிமிடங்கள் நீந்தி அன்று மாலை 6.33 மணியளவில் ஒருபுறமாக நீந்தி இலங்கையில் உள்ள தலைமன்னாரை அடைந்தார். தொடர்ந்து அங்கிருந்து மறுபுறமாக தனுஷ்கோடிக்கு நீச்சல் அடித்துக் கொண்டு வரும்போது அதிகாலை 2.09 மணி அளவில் சர்வதேச கடற்பரப்பை தாண்டி நீந்தி வரும் போது ஜெல்லி மீன்கள் கடித்ததால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து நீந்த முடியாமல் நீச்சலை முடித்தார்.

மீண்டும் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் நீந்தி சென்று அங்கிருந்து மீண்டும் தனுஷ்கோடிக்கு நீந்தி வருவதற்கு சுஜேத்தா தேப் பர்மன் இந்திய-இலங்கை இரு நாட்டு அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார்.

அனுமதி கிடைத்த நிலையில், ஜேத்தா தேப் பர்மன் புதன்கிழமை மாலை 4.45 மணியளவில் தனுஷ்கோடி பழைய துறைமுகத்திலிருந்து நீந்த ஆரம்பித்து 12 மணி 15 நிமிடங்கள் நீந்தி வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஒருபுறமாக நீந்தி இலங்கையில் உள்ள தலைமன்னாரை அடைந்தார்.

தொடர்ந்து உடனே மறுபுறமாக தலைமன்னாரிலிருந்து மீண்டும் தனுஷ்கோடி நோக்கி நீந்தத் தொடங்கி வியாழக்கிழமை பகல் 12.20 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை நீந்தி கரையை அடைந்தார். 62 கிலோ மீற்றர் தூரத்தை 19 மணி 31 நிமிடங்கள் ஜேத்தா தேப் பர்மன் நீந்தி கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் முதன்முறையாக தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு இரண்டு முறை நீந்தி கடந்தவர் என்ற சாதனையையும், தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு நீந்தி சென்று மீண்டும் தனுஷ்கோடிக்கு நீந்தி பாக்கு நீரிணை கடற்பகுதியை கடந்த முதல் பெண் என்ற சாதனையையும் சுஜேத்தா தேப் பர்மன் நேற்று படைத்தார். மேலும் தேனியைச் சேர்ந்த சினேகன் சாதனையையும் முறியடித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.