உயர்தர மாணவர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதற்கு எவரும் முன்வராமை கவலைக்குரியது – கல்வி அமைச்சர்

ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையால் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள உயர்தர மாணவர்களின் உரிமைகள் மீறப்படுகின்றமை தொடர்பில் குரல் கொடுப்பதற்கு எந்தவொரு அமைப்புக்களும் முன்வராதமை கவலைக்குரியது.

அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்க பொறுப்பை நிறைவேற்றுவதற்கு அப்பால் , சமூக பொறுப்பை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமையளிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –

பாடசாலைகள் மூடப்பட்டால் சிறைச்சாலைகள் திறக்கப்படும் என்ற கருத்து சமூகத்தில் வியாபித்து வருகிறது. இன்று வாக்குரிமை கூட இல்லாத தமது உரிமைகளைக் கோரி குரல் கொடுக்காத 41 லட்சம் பாடசாலை மாணவர்களுக்காகக் குரல் கொடுப்பதற்கு எவரும் முன்வரவில்லை.

பொருளாதார நெருக்கடிகள் அனைவருக்கும் பொதுவானவை. எனினும் அதற்காக மாணவர்களை பட்டினியால் வாடச் செய்யாது , மேலதிக வகுப்புக்களுக்கு அனுப்பி வைத்து 13 ஆண்டுகள் தமது பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கிய பெற்றோருக்கு , அந்த பிள்ளைகளின் வாழ்வின் திருப்பு முனையாக அமையும் உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் காலவரையறையின்றி காலம் தாழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் பெரும்பாலானவர்கள் மின் துண்டிப்பால் அசௌகரியங்களுக்கு உள்ளாகி , நேரத்துக்கு உணவு உண்ணாது பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தம்மை தயார்ப்படுத்தினர். எனவே, மாணவர்களின் நலன் கருதி தொழிற்சங்க கடமைகளை நிறைவேற்றுவதற்கு அப்பால் , சமூகப் பொறுப்புக்களை ஆசிரியர்கள் நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.