மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை உருவாக்குவோம் – நிதி இராஜாங்க அமைச்சர்

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வதற்காக துறைசார் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புக்கள் அரசாங்கத்துக்கு அரசியல் ரீதியில் சாதகமாக அமையாது.

ஆனால் பொருளாதார ரீதியில் நாட்டுக்கு சாதகமாக அமையும். மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை இந்த ஆண்டுக்குள் உருவாக்குவோம்.

எமது அரசியல் எதிர்காலத்தை நாட்டு மக்கள் தீர்மானிப்பார்கள் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி ஒத்துழைப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான அனைத்து விடயங்களையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம்.

ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் சிறந்த வழிகாட்டலுக்கு அமைய நாணய நிதியத்தின் நிபந்தனைகள் முறையாக செயற்படுத்தப்பட்டுள்ளன.

பொருளியல் ரீதியில் அறிவார்ந்தவர்கள் கூட தமது அரசியல் நோக்கத்துக்காக சர்வதேச நாணய நிதிய விவகாரத்தைத் தவறாக சித்திரித்துள்ளார்கள்.

பொய்யான கருத்துக்களை சமூகமயப்படுத்தியுள்ளார்கள். அனைத்து தடைகளையும் வெற்றிகொண்டு சிறந்த நிலையை எட்டியுள்ளோம்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுகள் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்படுகின்றன. எதிர்வரும் 20 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை கூட்டத்தில் இலங்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. கூட்டத்தைத் தொடர்ந்து நிதி ஒத்துழைப்பு கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கிறோம்.

நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு 20 மில்லியன் டொலராக வீழ்ச்சியடைந்தமை, சமூகக் கட்டமைப்பில் அத்தியாவசிய சேவைகளில் காணப்பட்ட நெருக்கடி நிலை உள்ளிட்ட காரணிகளால் சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டிய நிலைக்குத் தள்ளியது.

அரச முறை கடன்களைத் திருப்பி செலுத்த முடியாத நிலை உள்ளிட்ட பல்வேறு தவிர்க்க முடியாத காரணிகளை ஆராய்ந்ததன் பின்னரே சர்வதேச நாணய நிதியமே இறுதி தீர்வு என்று தீர்மானித்தோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வதற்காக துறைசார் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புக்கள் அரசாங்கத்துக்கு அரசியல் ரீதியில் சாதகமாக அமையாது.

ஆனால,; பொருளாதார ரீதியில் நாட்டுக்கு சாதகமாக அமையும்.பிரபல்யமடையாத தீர்மானத்தை நாட்டுக்காக முன்னெடுத்தோம். நாட்டின் எதிர்காலத்துக்காகவே இந்த மறுசீரமைப்புக்களை நெருக்கடியான சூழ்நிலையில் முன்னெடுத்தோம்.

தற்போதைய மறுசீரமைப்புக்களால் நாட்டு மக்கள் குறிப்பாக நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

நிலையான பொருளாதார மேம்பாட்டுக்காகவே அரசாங்கம் கடுமையான தீர்மானங்களை முன்னெடுத்தது. நாட்டு மக்கள் தற்போது உண்மை நிலையை விளங்கிக்கொண்டுள்ளார்கள். குடும்பம் நிம்மதியாக வாழும் சூழலை இந்த ஆண்டுக்குள் உருவாக்குவோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.