துஷான் ஜயவர்தனவின் நியமனம் சட்டவிரோதமானது – இலங்கைப் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு

இலங்கைப் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கு துஷான் ஜயசூரியவை நியமிக்கும் போது திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன நிதியமைச்சர் மற்றும் நாடாளுமன்ற அரசமைப்பு பேரவை ஆகியவற்றை தவறாக வழிநடத்தி ஆணைக்குழுவின் சட்டத்தை மீறியுள்ளார் என இலங்கைப் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு –

இலங்கைப் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு சட்டத்தின் 5(2) உறுப்புரையின் பிரகாரம் ‘ஒரு நபர் அல்லது அவருடன் தொடர்புடைய நபர் பொதுப்பயன்பாட்டு துறைசார்ந்த ஏதேனும் ஒரு நிறுவனத்தில் அல்லது நடவடிக்கைகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிதியியல் சார்ந்த அல்லது வேறு வழிகளில் தொடர்புடையவராகக் காணபடுவாராயின் அவர் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்க கூடாது. – எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் சட்டத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் மின்சாரத்துறை கைத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் தொடர்புடைய துஷான் ஜயசூரிய இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். சத்திய கடதாசி ஊடாக அவர் உறுப்பினர் பதவியைப் பொறுப்பேற்றுள்ளார்.

ஆணைக்குழுவின் சட்டத்துக்கு அப்பாற்பட்ட வகையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான நபர்களை ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்க வேண்டாம் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி திறைசேரியின் செயலாளரிடம் உத்தியோகபூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆணைக்குழுவின் சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளைத் தவிர்த்துக் கொள்ளுமாறும், நியமனம் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் திறைசேரி செயலாளரிடம் வலியுறுத்தினார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.