போதைப்பொருள் தொடர்பில் பொலிஸாருக்கு எதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் சில உண்மைகளும் உள்ளன – நீதி அமைச்சர்

போதைப்பொருள் அல்லாத வேறு பொருளகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து பழிவாங்கும் நோக்கில் ஒருசில பொலிஸார் பொய் வழக்கு தொடுக்கின்றனர் எனப் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பொது மக்களின் குற்றச்சாட்டில் சில உண்மைகளும் இருக்கின்றன என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்

நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

பொலிஸ் தேடுதலின் போது கைப்பற்றியதாகத் தெரிவித்து போதைப்பொருள் என தொடர்ந்து 20,30 மாதிரிகளை இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு பொலிஸாரால் அனுப்பப்படுகிறது.

அனுப்பப்படும் மாதிரிகளில் சில சந்தர்ப்பங்களில் அது போதைப்பொருள் அல்லாதனவாக இருக்கலாம். ஆனால் இவ்வாறு அனுப்பப்படும் பொருட்கள் குடு(போதைப்பொருள்) அல்லாத விடயங்களையும் போதைப்பொருள் என அனுப்புகின்றனர்.

இது சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யும் நடவடிக்கையாகும். அதனால் இது தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.

ஏனெனில் பெனடொல் குளிகை தூளை வைத்துக்கொண்டு சந்தேகத்தின் பேரில் ஒருவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தினால், அவர் போதைப்பொருளை வைத்திருந்திருந்த சந்தேக நபராக விளக்கமரியலில் வைக்கப்படுகிறார்.

பின்னர் பல மாதங்களுக்குப் பின்னர் இராசாயன பகுப்பாய்வு அறிக்கை வரும்போது, அது போதைப்பொருள் அடங்கியது அல்ல என உறுதிப்படுத்தப்படுகிறது.

சில பொலிஸார் பழிவாங்கும் நோக்கில் இவ்வாறான பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து நீதிமன்றில் ஆஜர்படுத்துகின்றனர் எனப் பொது மக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. இவ்வாறு தெரிவிக்கப்படும் முறைப்பாடுகளில் சில உண்மைகளும் இருக்கின்றன.

அத்துடன் போதைப்பொருள் தொடர்பாக வழக்கு தொடுக்கும்போது பொலிஸார் பின்பற்றும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் பொது மக்களிடமிருந்து குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.

அதனால் இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் காலங்களில் கடுமையாகக் கண்காணிக்க இருக்கிறோம். இந்த விடயங்களைக் கருத்திற்கொண்டு போதைப்பொருள் தொடர்பில் வழக்கு தொடுப்பதற்கு குறித்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. –

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.