அரசாங்கத்தின் நோக்கத்திற்கு அமையவே தேர்தல்கள் ஆணைக்குழு செயற்படுகிறது – வீரசுமன வீரசிங்க

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் நோக்கத்திற்கு சார்பாகவே தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு செயற்படுகிறது. வாக்கெடுப்பை நடத்த ஆணைக்குழு எடுத்த தீர்மானங்கள் அரச நிறுவனங்களுக்கிடையில் முரண்பாட்டைத் தோற்றுவித்துள்ளன என இலங்கை கம்யூனிசக் கட்சியின் பதில் தலைவர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி இடம்பெறாது, தேர்தலுக்கான புதிய திகதி நியமிப்பதும், வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்கு நிதி கிடைக்கவில்லை. ஆகவே, வாக்குச்சீட்டுக்களை வழங்க முடியாது என அரச அச்சகத் திணைக்கள தலைவர் குறிப்பிடுவதும், பின்னர் தேர்தல் பிற்போடப்படுவதும் வழக்கமாகி விட்டது.

நாட்டு மக்களின் தேர்தல் உரிமை கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் நோக்கத்துக்கு சார்பாகவே தேர்தல்கள் ஆணைக்குழு செயற்படுகிறது. ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மந்தகதியில் காணப்படுகின்றன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரங்கள் கடந்த செப்ரெம்பர் மாதம் ஆணைக்குழுவுக்கு பொறுப்பாக்கப்பட்டது. ஆனால் தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த டிசெம்பர் மாதம் 26 ஆம் திகதி தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைளை முன்னெடுத்தது.

வாக்கெடுப்பை நடத்துவதற்கு சகல அரச நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்த தீர்மானங்களை அரச நிறுவனங்கள் செயற்படுத்த மறுக்கின்றன. தூரநோக்கமற்ற தீர்மானங்களால் துறைசார் மட்டத்தில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெற்றால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வி அடையும் என்பதால் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிற்போடப்படுகிறது. இரண்டு அரசியல் கட்சிகளுக்காக நாட்டு மக்களின் அடிப்படை வாக்குரிமையை மலினப்படுத்துவது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.