கோட்டாபய ராஜபக்ஷ நாட்டுக்கு அழிவையே மிகுதியாக்கினார் – கெவிந்து குமாரதுங்க

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயற்படவில்லை. நாட்டுக்கு அழிவையே மிகுதியாக்கினார்.

ஆகவே, அவர் பதவி விலகியதையிட்டு நாங்கள் கவலையடையவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்றுவதை கட்டாயமாக்கும் வகையில் 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உறுதியான தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

ஒரு மாணவன் தனது தாய்மொழியில் கல்வி கற்பதற்கு அரசமைப்பின் ஊடாக உரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்த உரிமையை மறுக்கும் வகையில் தான் 2020 ஆம் ஆண்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்குத் தோற்ற வேண்டும் என்ற வர்த்தமானி வெளியிடப்பட்டது.

இந்தத் தீர்மானத்தால் சாதாரண மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சட்டக் கல்லூரி பரீட்சை மொழி தொடர்பான பிரச்சினைக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்பேற்க வேண்டும்.

இந்தத் தவறை நாடாளுமன்றத்தின் ஊடாக திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆகவே, சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் தான் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என்ற வர்த்தமானியை நாடாளுமன்றத்தின் ஊடாக இரத்து செய்ய சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டு வர நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம். சிறந்த மாற்றத்தை எதிர்பார்த்தோம். ஆனால், எதிர்பார்ப்புக்கள் ஏதும் நிறைவேறவில்லை.

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை கோட்டாபய ராஜபக்ஷ நிறைவேற்றவில்லை. முறையற்ற வகையில் செயற்பட்டார்;. நாட்டுக்கு அழிவை மாத்திரம் மிகுதியாக்கினார்.

ஆகவே, இரண்டரை வருட காலத்தில் மக்கள் போராட்டத்தால் அவர் பதவி விலகியதையிட்டு நாங்கள் கவலையடையவில்லை. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.