அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் புதிய உணவு உதவியை அறிவித்தார் அமெரிக்கத் தூதுவர் சங்

அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் (USDA) வெளிநாட்டு விவசாய சேவையின் (FAS) “McGovern-Dole Food for Education Program” ஊடாக 770 மெட்ரிக் தொன் சத்தூட்டப்பட்ட அரிசி மற்றும் 100 மெட்ரிக் தொன் சத்தூட்டப்பட்ட தாவர எண்ணெய் என்பன அண்மையில் இலங்கையை வந்தடைந்ததாக தூதுவர் ஜுலீ சங் இன்று அறிவித்தார்.

2021ஆம் ஆண்டு முதல், USDA உணவு உதவியானது, பிளவுபட்ட மஞ்சள் பட்டாணி மற்றும் அலாஸ்கன் இளஞ்சிவப்பு சால்மன் ஆகியவற்றைப் பயன்படுத்தி (நுவரெலியா, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய) ஏழு மாவட்டங்களிலுள்ள 835 ஆரம்ப பாடசாலைகளில் கல்வி பயிலும் 95,000 சிறார்களுக்கு புரதச்சத்து குறைநிரப்பி ஊட்டச்சத்தினை வழங்கியுள்ளது.

தூதுவர் ஜுலீ சங் அமெரிக்க அரசாங்கத்தினால் உதவிசெய்யப்படும் பாடசாலைகளில் உணவளிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை அவதானிப்பதற்காக இன்று குருஅரகம ஆரம்பப் பாடசாலைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இதனை அறிவித்தார்.

இப்பாடசாலையில் புதிய கழிவறைகளைக் கட்டுவதற்கும் அமெரிக்கா உதவி செய்தது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, சப்ரகமுவ மாகாண ஆளுநர் கௌரவ. டிக்கிரி கொப்பகடுவ, மற்றும் USDA/FAS இன் சிரேஷ்ட பிராந்திய விவசாய இராஜதந்திர அலுவலர் மரியானோ ஜே. பெய்லார்ட் ஆகியோரும் தூதுவர் சங்குடன் இணைந்து கொண்டனர்.

இலங்கை அரசாங்கம் மற்றும் உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து சேவ் த சில்ட்ரன் அமைப்பின் பங்காண்மையுடன் இலங்கையில் சந்தைக் கூட்டணிகள் ஊடாக சுயாட்சி, கல்வியறிவு மற்றும் கவனிக்கும் தன்மை ஆகியவற்றை மேம்படுத்தும் (PALAM/A) செயற்திட்டத்தை USDA/FAS நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

பெருந்தொற்று உச்சத்தில் இருந்த காலப்பகுதியில் உணவு சரக்குத்தொகுதிகளை வழங்கத் தொடங்கிய இந்த 27.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முன்முயற்சியானது இந்த ஆண்டு நிறைவடையும்.

கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை ஏற்பாடுகளை உள்ளடக்கிய இச்செயற்திட்டமானது பாடசாலைக்குச் செல்லும் வயதுடைய பிள்ளைகளின் குறுகிய கால பசியைக் குறைக்கும் அதேவேளை அவர்களது கல்வியறிவு மற்றும் போசாக்கு ஆகியவற்றை மேம்படுத்துகிறது.

இன்னும் பரந்த அளவில், கடந்த வருடத்தில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் இலங்கைப் பாடசாலை மாணவர்களுக்கு அமெரிக்க அரசாங்கம் உணவு உதவிகளை வழங்கியுள்ளது.

இதன்போது தூதுவர் சங் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் மற்றும் பாடசாலை மாணவர்களையும் சந்தித்தார். “அமைச்சர் பிரேமஜயந்தவுடன் இணைந்து குழந்தைகளின் போசாக்கு மற்றும் கல்விக்கு இலங்கையின் பாடசாலைகளில் உணவளிக்கும் நிகழ்ச்சித்திட்டம் எவ்வாறு பயனளிக்கிறது என்பதையும், இந்த முக்கியமான முயற்சியில் அமெரிக்க அரசாங்கத்தின் உதவி ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கத்தையும் நேரடியாகப் பார்ப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன். ஒரு வாரத்தில் நான் விஜயம் செய்த, அமெரிக்காவிடமிருந்து உணவு உதவியைப் பெறும் இரண்டாவது பாடசாலை இதுவாகும்.

கடந்த வாரம் 7 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பாடசாலைகளில் உணவளிக்கும் ஒரு நிகழ்ச்சித்திட்டத்திற்கு உதவிசெய்வதற்காக USAID உலக உணவுத் திட்டத்துடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் கொழும்பு வடக்கிலுள்ள புனித ஜோன்ஸ் மகா வித்தியாலயத்திற்கு நான் சென்றிருந்தேன். 75 வருடங்களாக ஒரு வலுவான, நீடித்த மற்றும் வெற்றிகரமான பங்காண்மையில் இலங்கை மக்களுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்றியுள்ளது. அமெரிக்க குடிமக்கள் வழங்கும் உணவு உதவியின் ஊடாக இப்பிள்ளைகள் ஒரு ஆரோக்கியமான காலை உணவை உண்கிறார்கள்.

கடினமான காலங்களில் பங்காளர்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு உதவிசெய்கிறார்கள் என்பதை உண்மையில் இது நிரூபிக்கிறது.” என தூதுவர் சங் அவர்கள் பாடசாலை வகுப்பறைகளைப் பார்வையிட்டபோது குறிப்பிட்டார்.

அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 வது ஆண்டு நிறைவை இவ்வாண்டு குறிக்கிறது. அந்த உறவானது, எமது மக்களுக்கிடையில் நிலவும் நேரடி உறவுகள், நாங்கள் ஒன்றிணைந்து அடைந்து கொண்ட முன்னேற்றம் மற்றும் இலங்கையர்கள் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு உதவிசெய்யும் நெருங்கிய பங்காண்மை ஆகியவற்றால் வரைவிலக்கணம் செய்யப்படும் ஒரு வளமான வரலாற்றைக் கொண்டதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.