பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் கேள்விக்குறியாகியுள்ளன – லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

பல்வேறு நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கும் அரசியல் கட்சிகள், குழுக்களின் போராட்டங்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக பல்கலைக்கழகங்களின் கல்வி செயற்பாடுகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

மாத்தறை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் அவர் கூறுகையில் –

பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டிருந்த நாடு இன்று ஒப்பீட்டளவில் ஸ்திரமடைந்துள்ளது. இருப்பினும் தொழிற்சங்கங்களால் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் மீண்டெழும் நாடு பின்னோக்கி கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்படுகிறது.

அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு நோக்கங்கள் இருக்கலாம். இருப்பினும் நாட்டின் பொருளாதாரத்தை பயன்படுத்தி அதனை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்க கூடாது.

அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்காக வௌவேறு முயற்சிகளை மேற்கொள்கின்றன. நாட்டின் மீதான பற்று காரணமாக இவ்வாறு செயற்படுமாயின் நாம் அதனை வரவேற்கிறோம்.

மேலும் நாட்டை எவ்வாறு மீட்டெடுப்பது? எதிர்காலத்தில் எவ்வாறு வேலைத்திட்டங்களை மேற்கொள்வது? என்பது தொடர்பில் அவர்கள் வெளிப்படுத்துவதில்லை. இதுவே தற்போதைய பிரச்சினையாகக் காணப்படுகின்றது. நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முன்வருவதை விட நாட்டைக் கட்டியெழுப்பும் முறையை முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.

இன்றளவில் வெளிநாடுகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஒதுக்கப்படும் நிதி சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தை விட அதிகமாகும். நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்கள் நிறுவதற்கு அனுமதியளிக்கப்படாமையால் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பிள்ளைகளை வெளிநாட்டு பட்டப்படிப்புகளுக்காக அனுப்பும் போது வறுமைக்கோட்டின் கீழ் காணப்படும் குடும்பங்களின் நிலை மிகவும் கவலைக் குரியதாகியுள்ளது.

இவ்வாறானதொரு கலாசாரத்தை மாற்ற வேண்டும். இதற்கான மாற்று வழிகளை உருவாக்க வேண்டும். இதன் பொருட்டு நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதோடு குறுகிய கால பகுதிக்கு சில தியாகங்களையும், விட்டுக்கொடுப்புகளையும் செய்ய வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.