சங்கிலியன் மந்திரிமனையின் மீளுருவாக்கப் பணிகள் இரு வாரங்களில் நிறைவடையும் – பேராசிரியர் புஷ்பரட்ணம்

சங்கிலியன் தோரண வாயில் வேலைகள் இரண்டு வார கால பகுதிக்குள் முடிவடைந்து விடும். அதன் பின்னர் மந்திரிமனை மீள் உருவாக்க செயற்பாடுகளை ஆரம்பிக்க உள்ளோம். அதற்கான நிதியுதவிகளை மக்களிடம் கோருகிறோம் என தொல்லியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் பரமு.புஷ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் சட்டநாதர் ஆலயத்துக்கு அருகில் உள்ள மந்திரிமனை வளாகத்தினுள் உள்நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு விளக்கம் கொடுக்கும் முகமாகவே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் –

2010 ஆம் ஆண்டு பிராந்திய தொல்லியல் திணைக்களம் ஒன்று உருவாக்கப்பட்டது. குறித்த திணைக்களத்தின் ஆலோசகராகப் பதவியாற்றி இருக்கின்றேன். அதனால் மேற்படி விடயம் தொடர்பில் நான் சில கருத்துக்களைக் கூறலாம் என நினைக்கிறேன்.

யாழ்ப்பாணத்தில் 86 இடங்கள் மரவுரிமை இடங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அதில் முதலாவதாக மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாசல், ஜமுனா ஏரி மற்றும் சங்கிலியன் அரண்மனை ஆகிய இடங்கள் பிரகடனப்படுத்தப்பட்டு அவற்றுக்கான பெயர்ப் பலகையும் அங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அவை வர்த்தகமானிலும் வெளியிடப்பட்டுள்ளன. தொல்லியல் திணைக்களம் மரவுரிமை இடங்களாக அடையாளப்படுத்தி அதனை வர்த்தகமானியில் பிரசுரம் செய்தால் நில உரிமையாளர் அங்கு புதிதாக எதையும் மாற்றி அமைக்க முடியாது.

அதே சமயத்தில் தொல்லியல் திணைக்களமும் நில உரிமையாளரின் அனுமதியின்றி எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாது. இதனால்தான் மந்திரிமனை உரிய காலத்தில் பேணப்படாமைக் கான காரணமாகும்.

அதே சமயம், தொல்லியல் திணைக்களம் மந்திரி மனை தொடர்பாக மிகுந்த அக்கறையுடன் நில உரிமையாளருடன் பேரம்பேசி அந்த நிலத்தைப் பெற்று அதனை சீர் செய்யும் வசதிகளும் நிலைமைகளும் தற்போது தொல்லியல் திணைக்களத்திடம் இல்லை.

அதனால் தான் நாம் யாழ்ப்பாணத்தில் மரவுரிமை மையம் ஒன்றை உருவாக்கி அதன் முதல் பணியாக சங்கிலியன் தோரண வாசலை மீள் உருவாக்கம் செய்து அது முடிவுறும் நிலையில் இருக்கின்றது.

இரண்டு வாரத்தில் அது முடிவடையும் அதை செய்வதற்கு எங்களுடைய மருத்துவபீட பேராசிரியர் மருத்துவர் ரவிராஜ் 22 லட்சம் ரூபாவை அதாவது அதற்குரிய செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்டார்.

மந்திரி மனையை மீள் உருவாக்கம் செய்கின்ற முயற்சியில் ஈடுபட்ட போது அதனுடைய உரிமையாளர் எங்களோடு தொடர்புகொண்டு சில நிபந்தனைகளை விதித்தார். தன்னுடைய நிலங்கள் அபகரிக்கப்பட்டு தனியாரால் சில கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன எனவும், அவற்றை சட்டநாதர் கோவிலுக்குப் பெற்றுத்தருவதற்கு உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

நாங்களும் முயற்சி செய்தோம் அது முழுமையாக வெற்றி அளிக்கவில்லை. பின்னர் நாங்கள் அந்த நிலத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு முயற்சி எடுத்தோம். அதனை அவர் தவணை முறையில் பணம் செலுத்திப் பெறுவதற்கு ஒப்புக்கொண்டு பல மாதங்கள் பேசியதன் பின்னர் இப்பொழுது எங்களுக்கு அதற்கான ஒப்புதலைத் தந்திருக்கின்றார்.

நாங்கள் தற்போது அதற்குரிய பணத்தை அவருக்குக் கொடுத்து மீள் உருவாக்க பணியை முன்னெடுத்துள்ளோம். சில ஆரம்பப் பணிகள் ஏற்கனவே செய்யப்பட்டிருக்கின்றன. அவ்வாறு செய்து கொண்டிருக்கும் பொழுதுதான் நில உரிமையாளர் ஒப்பந்த முடியும் வரை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

இதனால்தான் அந்த இடத்தை தொல்லியல் திணைக்களம் தனியாக மீள் உருவாக்கம் செய்ய முடியாது. அதே நேரத்தில் நில உரிமையாளரும் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட மரவுரிமைச் சின்னத்தை தான் விரும்பியவாறு எந்த மாற்றத்தையும் மேற்கொள்ள முடியாது.

இப்பொழுது நில உரிமையாளர் எங்களுக்கு நிலத்தைத் தருவதற்கு முழுமையான ஒப்புதல் அளித்திருக்கின்றார். நாங்கள் தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியுடன் மீள் உருவாக்கம் செய்வதற்கான திட்டங்கள் எல்லாம் கொடுக்கப்பட்டு அவை தொல்லியல் திணைக்களத்தாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

எனவே சங்கிலியன் தோரண வாசல் வேலைகள் பூர்த்தி அடைந்ததன் பின்னர் மந்திரி மனையின் பணிகள் ஆரம்பிக்கப்படும். அதனை மேற்கொள்வதற்கு இன்று மக்கள் மத்தியில் அதிருப்தி நிலையில் இருக்கிறவர்களும் பெரும் பங்களிப்புச் செய்ய வேண்டும். ஐந்து பேர் நினைத்த உடனே இதை செய்து கொள்ள முடியாது. பல மில்லியன் கணக்கான பணம் அவற்றை மீள உருவாக்குவதற்கு எங்களுக்குத் தேவை. நாங்கள் அந்த பணியை தொடங்குகின்ற பொழுது ஊடகங்கள் ஊடாகவும் அதிருப்தி நிலையில் உள்ள மக்களிடமும் அவற்றை மீள் உருவாக்கம் செய்வதற்கு நிதி உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுப்போம்.

அவ்வாறு செய்கின்ற பொழுது அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய முடியும் என்பது தான் உண்மையான நிலைப்பாடு. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.