சிங்கள குடியேற்றத்துக்காக தமிழர் தாயகம் இராணுவத்தினரால் அழிக்கப்படுகிறது – செல்வராசா கஜேந்திரன்

தமிழ் இனப்படுகொலையாளி சவேந்திர சில்வாவால் நாவற்குழியில் திறந்து வைக்கப்பட்ட பௌத்த விகாரை அகற்றப்பட வேண்டும். யுத்தம் முடிவடைந்த பின்னரான காலப்பகுதியிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர் தாயகம் இராணுவத்தின் உதவியுடன் அழிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்படுகின்றமை எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் பெற்றோலிய வளங்கள் சட்ட ஒழுங்குவிதிகள் நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் ஒதுக்கீட்டு சட்ட கட்டளைகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறல் தொடர்பான பிரேரணைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்பு நல்லதொரு சமிக்;ஞையல்ல. நாடு தொடர்ந்து கடன்சுமைக்குள் சிக்குண்டுள்ளது என்பதை மேன்மேலும் வலுப்படுத்துகிறது. நாடு பொருளாதார பாதிப்பை எதிர்க்கொண்டதன் பின்னர் தான் மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்,மக்கள் முறைமை மாற்றத்தை கோரினார்கள்.

சிங்கள ஆட்சியாளர்கள் தான் சிங்கள- தமிழ் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை உருவாக்கி தமிழர்களுக்கு எதிரான வன்மங்களைக் கட்டவிழ்த்து விட்டார்கள்,அதற்கு இந்த ஒற்றையாட்சி அரசியல் முறைமை கட்டமைப்பு சாதகமாக அமைந்தது. யுத்தத்தின் பின்னர் நாடு அபிவிருத்தி பாதையில் செல்லாமல், அழிவு பாதையில் சென்றுள்ளது. ஆகவே கடந்த 75 ஆண்டுகாலமாக கடைபிடித்த ஒற்றையாட்சி முறைமையைக் கைவிட்டு தமிழர் தொடர்ந்து வலியுறுத்தும் சமஷ்டியாட்சி அரசியல் முறைமையை அமுல்படுத்த வேண்டும். இதுவே உண்மையான முறைமை மாற்றமாக இருக்கும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வாதிகார ஆட்சி நோக்கிச் செல்கிறார். இது நல்லதொரு நிலையல்ல, சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக மேற்குலக நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் புறச்சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. இதன் காரணமாக சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளது, ஆகவே, கிடைத்த நிதியை கொள்ளையடித்தால் நாடு மேன்மேலும் தீவிரமான பாதிப்புக்களை எதிர்கொள்ளும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர் தாயகத்தை அழிக்கும் வகையில் திட்டமிட்ட வகையில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்படுகின்றன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நாவற்குழியில் இனப்படுகொலையாளி சவேந்திர சில்வாவால் பௌத்த விகாரை திறந்து வைக்கப்பட்டது.

ஒரு சிங்களவர்கள் கூட வாழாத நாவற்குழி பகுதியில் ராஜபக்ஷர்களால் சிங்கள குடியேற்றம் உருவாக்கப்பட்டது. ரயில் திணைக்களத்துக்கு சொந்தமான காணியில் சட்டவிரோதமான முறையில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு, இனப்படுகொலையாளி சவேந்திர சில்வாவால் திறந்து வைக்கப்பட்டது, இதற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தோம்.

தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும், இனப்படுகொலையாளி சவேந்திரசில்வாவால் திறந்து வைக்கப்பட்ட விகாரை அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும். அத்துடன் கைத்தடியில் அமைக்கப்பட்டு வரும் விகாரை, குருந்தூர்மலை விகாரை, கொக்குத்தொடுவாய், எமாங்குளம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் விகாரைகள் அகற்றப்பட வேண்டும்.

நாங்கள் பௌத்தத்துக்கும், சிங்களவர்களுக்கும் எதிரானவர்கள் அல்லர். நயினைதீவு,கிளிநொச்சியில் உள்ள பௌத்த விகாரைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. விடுதலை புலிகள் அமைப்பு காலத்தில் கூட இந்த விகாரைகள் இருந்தன. போராளிகளால் எவ்வித பாதிப்பும் பௌத்த விகாரைகளுக்கு ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் யுத்தத்தின் பின்னர் தமிழரின் தாயகம் இராணுவத்தின் துணை ஊடாக திட்டமிட்டு அழிக்கப்படுகிறது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இழுபறி நிலையில் உள்ளது. நிதி இல்லை, ஆகவே தேர்தல் இல்லை என ஆளும் தரப்பு குறிப்பிடுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. ஆகவே, நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த தேர்தலை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளதா?

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க உலக வங்கி முன்வந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆகவே இந்த நிதியுதவி 200 ஆண்டுகாலமாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கும் வழங்கப்படுமா? – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.