ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகள் நேர்மையாக முன்னெடுக்கப்படும் – விதுர விக்கிரம நாயக்க

நாட்டின் அனைத்து முஸ்லிம்களுக்கும் கட்சி வேறுபாடுகளின்றி அரசாங்கம் சேவைகளை வழங்கும். தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். அதன்படி ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகளை எவ்வித சிக்கல்களுமின்றி நேர்மையாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதற்கனவே முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் தனியான அலுவலகமொன்று திறந்து வைக்கப்பட்டது என புத்த சாசன சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரம நாயக்க தெரிவித்தார்.

அமைச்சர் இன்று (21) செவ்வாய்க்கிழமை கொழும்பு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் ஹஜ் விவகாரங்களுக்கென தனியான அலுவலகமொன்றினைத் திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இதுவரை காலம் ஹஜ் விவகாரங்களுக்கென தனியான ஒரு அலுவலக இருக்கவில்லை. இதனால் ஹஜ் யாத்திரிகர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டனர். மக்களுக்கு சிரமங்களைத் தவிர்ப்பதற்காகவே காரியாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அனைத்து முஸ்லிம்களுக்கும் கட்சி வேறுபாடுகளின்றி அரசாங்கம் சேவைகளை வழங்கும். தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும்.

எந்தவொரு மதத்திலும் பிரிவினைகள் போதிக்கப்படவில்லை. இவற்றை கடந்து நாம் பயணிக்க வேண்டும். அவர்களின் மதவாழிபாடுகளை முழுமையாக நிறைவேற்ற எம்மால் முடிந்தளவு ஒத்துழைப்புகளை வழங்க முன்வரவேண்டும்.

குறிப்பாக முஸ்லிம்கள் தங்களது மத வழிபாடுகளில் ஈடுபடும் போது பிரச்சினைகள் எழுவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருக்கிறது. இது தொடர்பில் ஆராய அரசாங்கம் முன்வந்துள்ளது.

கடந்த வருடம் கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக குறிப்பிட்ட சிறிய தொகையினருக்கே ஹஜ்வாய்ப்புக் கிட்டியது. இவ்வருடம் இலங்கைக்கு 3500 ஹஜ் கோட்டா கிடைக்கப்பெற்றுள்ளது. ஹஜ் முகவர் நியனத்துக்கான நேர்முகப்பரீட்சை தற்போது நடைபெற்று வருகிறது.

நேர்முகப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் அடுத்த வாரம் ஹஜ் முகவர்கள் நியமனம் வழங்கப்பட்டு ஹஜ் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும். முகவர்கள் வழங்கும் சேவைக்கேற்ப ஹஜ் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும். இது தொடர்பான விபரங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.