மீன் ஏற்றுமதி வருமானம் முறையாக நாட்டுக்கு கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் – டக்ளஸ்

டலுணவுகளின் ஏற்றுமதியின் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் அந்நிய செலாவணி முறையாக பேணப்படுவதில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில் கடலுணவு ஏற்றுமதியின் மூலம் பெறப்படும் அந்நியச் செலாவணி முறையாக கிடைப்பதை உறுதி செய்வது மீன் ஏற்றுமதியாளர்களின் பொறுப்பாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுக்கு கடலுணவுகளை ஏற்றுமதி செய்வோர் தற்போதைய நிலையில் எதிர்கொண்டுள்ள சவால்கள் மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் கடலுணவுகளுக்கான வருமானம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (21) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், வெளிநாடுகளில் இருந்து மீன்களை வரவழைத்து மீள் ஏற்றுமதி செய்வதன் மூலம் உள்ளூர் மீன் தட்டுப்பாடு நிலவும் வேளையில் தமது தொழிலை சீராக பேண சந்தர்ப்பம் வழங்குமாறு ஏற்றுமதியாளர்கள் விடுத்த கோரிக்கையை கவனத்தில் எடுத்திருந்தார்.

அத்தோடு நாட்டை சுற்றி கடல்வளமும் நாட்டினுள் நீர் வேளாண்மைக்கு ஏதுவான சூழலும் நிறைந்திருக்கும் நிலையில், தேவையான கடலுணவுகளை நாமே உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே தன் எதிர்பார்ப்பாக இருப்பதாக தெரிவித்தார்.

எவ்வாறெனினும், குறித்த கோரிக்கை தொடர்பில் விரிவாக கலந்துரையாடி முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அதேபோன்று பல நாள் மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடி, நியாயமான, நிலையான விலையை நிர்ணயித்துக்கொள்ளுமாறும் அமைச்சர் ஏற்றுமதியாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

மேலும், பல நாள் கடற்றொழிலாளர்களின் மீன்பிடி கலன்களில் கடலுணவுகளை பாதுகாக்கும் பொருட்டு, தொழில்நுட்ப கருவிகளை பொருத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு கடற்றொழில் அமைச்சர் ஏற்றுமதியாளர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

இக்கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் இந்து ரத்நாயக்க, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த உட்பட அமைச்சின் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.