இலங்கை கடற்றொழிலாளர்களின் பாதிப்புக்களை தமிழகம் புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது – டக்ளஸ்

இந்தியக் கடற்றொழிலாளர்களின், அத்துமீறி எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில் முறையால் இலங்கையின் வட பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களே பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கின்றமை வருத்தமளிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான இந்தியப் பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் ஜேகப் உடனான சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பு தொடர்பாக மேலும் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா –

இலங்கையின் கடல் வளத்தினையும், வட பகுதி தமிழ் பேசும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் நோக்குடன் இலங்கை கடற் படையினர் மேற்கொள்ளும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடர்பாக இந்தியாவில் வெளிப்படுத்தப்படும் தவறான கருத்துக்கள் இரண்டு நாடுகளுக்கும் இராஜதந்திர நெருக்கடிகளை ஏற்படுத்தக் கூடியவை எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்ட விரோத தொழிலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக முன்னெடுக்கப்படும் இராஜதந்திர அணுகுமுறைகளின் தொடர்ச்சியாக பிரதி உயர்ஸ்தானிகருடனான சந்திப்பு இடம்பெற்றதாகவும், இதன்போது இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்தில் இரண்டு நாடுகளும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.