மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தாத சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகள் – ஹரி ஆனந்தசங்கரி

இலங்கைக்கான நிதியுதவிச்செயற்திட்டத்துக்கு அனுமதியளித்திருக்கும் சர்வதேச நாணய நிதியம், அதனை முன்னிறுத்தி நிறைவேற்றப்படவேண்டிய நிபந்தனைகளில் இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தாதமை தமக்கு மிகுந்த அதிருப்தியளிப்பதாக கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தின்கீழ் எதிர்வரும் 48 மாதகாலத்தில் இலங்கைக்கு சுமார் 300 கோடி டொலர் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை கடந்த திங்கட்கிழமை அனுமதியளித்துள்ளது.

அதனையடுத்து சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் தமிழ்மக்கள் சார்ந்து கவனத்திற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டும் நோக்கில் செவ்வாய்கிழமை கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ஹரி ஆனந்தசங்கரி மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் ஸ்திரமற்ற, வங்குரோத்து நிலையிலுள்ள நாடாக மாறியிருக்கின்றது.

சுமார் ஒருவருட காலத்துக்கு முன்னர் உணவு, எரிபொருள் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கான தட்டுப்பாட்டுடன் இலங்கையின் பொருளாதாரம் மிகமோசமடைந்தது. அது நாடளாவிய ரீதியில் பாரிய மக்கள் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு வழிகோலியதுடன், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பதவி விலகவேண்டிய நிலையைத் தோற்றுவித்தது. அதனைத்தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டார்.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த ஆண்டு செப்ரெம்பர் முதலாம் திகதி சர்வதேச நாணயத்துடன் உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்ட நிலையில், இலங்கைக்கான உதவிச்செயற்திட்டத்துக்குக் கடந்த திங்கட்கிழமை சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை அனுமதியளித்துள்ளது.

அதன்படி இந்த உதவிச்செயற்திட்ட இணக்கப்பாடு தொடர்வதற்கு இலங்கை பல்வேறு நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யவேண்டியுள்ளது.

ஆனால,; சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்பட்டுள்ள நிபந்தனைகளில் இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படாமை எம்மத்தியில் கடும் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது.

குறிப்பாக இலங்கையில் நீண்டகாலமாக நிலவும் அரசியல் பிரச்சினைக்கு உரியவாறான தீர்வு வழங்கப்படுவதுடன், வடக்கு – கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையும், பொருளாதாரத்துடன் தொடர்புடைய விவகாரங்களைத் தீர்மானிப்பதற்கான அதிகாரமும் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதேவேளை இந்தச் சந்திப்பில் கருத்துவெளியிட்ட இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பின் (பேர்ள்) பிரதிநிதி, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தொடரும் மனித உரிமை மீறல்கள், அதிகரித்த இராணுவமயமாக்கம், காணி அபகரிப்பு, தொல்பொருள் திணைக்களத்தின் முறையற்ற செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியதுடன் அவை முடிவுக்குக்கொண்டுவரப்படவேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் வலியுறுத்தினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.