மக்களை நெருக்கடிக்குள்ளாக்காத நிபந்தனைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் – ஹர்ஷ டி சில்வா

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை நிதியுதவி பெற்றுக்கொள்ளும் இறுதி இணக்கப்பாட்டு கைச்சாத்து கடிதம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்காமல் எவ்வாறு சிறந்த தீர்மானத்தை எடுக்க ஒத்துழைப்பு வழங்குவது.

நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்காத நிபந்தனைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன என ஆளும் தரப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள், அடிப்படையற்ற விடயங்களை முன்வைக்கிறார்கள்.

சர்வதேச நாணய நிதியத்துக்கு சென்றால் அமைச்சரவையில் இருந்து விலகுவதாகக் குறிப்பிட்டவர்கள் இன்றும் ஆளும் தரப்பின் பக்கம் உள்ளார்கள்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் பொருளாதார ரீதியில் எடுத்த தவறான தீர்மானங்களால் நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொள்ளும் தன்மையில் உள்ளது, ஆகவே, சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுங்கள் என 2020 ஆம் ஆண்டு அரசாங்கத்திடம் பலமுறை அழுத்தமாக குறிப்பிட்டோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதை பொதுஜன பெரமுன அரசாங்கம் ஓர் எதிரியைப் போல் பார்த்தது. இறுதியில் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது. தாமதமான நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீளும் நடவடிக்கைகளை கொண்டு அரசியல் செய்யும் தேவை எமக்குக் கிடையாது.

சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்பு தொடர்பான 154 பக்க அறிக்கை நேற்றுக் காலை கிடைக்கப் பெற்றது. ஆகவே, அறிக்கையை முழுமையான பரிசீலனை செய்ய வேண்டும். கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் அவதானத்துடன் முன்னெடுக்கப்பட வேண்டும். எதிர்வரும் நாள்களில் இந்த விடயம் தொடர்பில் முழுமையான தகவல்களை வெளிப்படுத்துவோம்.

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் 14 ரில்லியன் ரூபா தேசிய கடன் உள்ளது. மறுபுறம் வங்கி நிதியியல் கட்டமைப்பு தொடர்பில் தெளிவான நிலைப்பாடு குறிப்பிடப்படவில்லை.

முதல் தவணைத் தொகையை பெற்றுக்கொள்ளும் இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் நிதியமைச்சர், இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கைச்சாத்திட்டுள்ளனர். இந்த இணக்கப்பாட்டு கைச்சாத்து கடிதம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்படும் பேச்சுகள், இணக்கப்பாட்டு ஆவணங்களை நாடாளுமன்றத்துக்கு வெளிப்படையாக சமர்ப்பிக்காமல் எவ்வாறு ஒத்துழைப்பு வழங்குவது, நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்காத நிபந்தனைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்,ஏனைய நிபந்தனைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.