அரசாங்கம் நாட்டின் பொருளாதார மீட்சிக்கு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு – குமார வெல்கம
நாடாளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்தரப்பு என இருபுறமும் திருடர்கள் உள்ளார்கள், ஆகவே திருடர், திருடர் என விமர்சித்துக் கொள்வது பயனற்றது.
மோசடி செய்யப்பட்ட நிதி நாட்டில் இல்லை, ஆகவே நாட்டின் எதிர்காலத்தையும், இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தையும் கருத்திற் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் விசேட உரையை தொடர்ந்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதையிட்டு மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாடு வங்குரோத்து நிலைய அடைந்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கடின முயற்சிக்கு அமைய சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதையிட்டு எதிர்க்கட்சி என்ற ரீதியில் மகிழ்ச்சியடைய வேண்டும்.
தற்போதைய நிலையில் முழுமையான ஒத்துழைப்பை நான் வழங்குவேன்,ஏனெனில் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது.
எந்நாளும் திருடன், திருடன் என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் எந்த திருடனும் பிடிபடவில்லை. பிடிக்கப்பட்ட திருடனும் இல்லை. நாடாளுமன்றத்தில் இரு புறமும் திருடர்கள் இருக்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில் 30 வருடகாலம் உள்ளவர் என்ற அடிப்படையில் குறிப்பிடுகிறேன், ஆளும் மற்றும் எதிர்தரப்பில் திருடர்கள் உள்ளார்கள்.
பிடிப்பட்டால் அனைவரும் நெருக்கடிக்குள்ளாகுவார்கள் என்பதால் திருடர்கள் ஒருபோதும் அகப்படமாட்டர்கள். மோசடி செய்யப்பட்ட நிதி நாட்டில் இல்லை.
ஜனாதிபதியால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியாது என ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டார்கள், ஆனால் தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது, ஆகவே, இதன் பயனை முழுமையாகப் பெற்றுக் கொள்ள வேண்டும். நாட்டின் எதிர்காலத்தையும், இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தையும் கருத்திற் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை