இருதரப்பு வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்த இலங்கை – இந்தியா அவதானம்

இலங்கைக்கு இந்திய முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துதல் உள்ளிட்டவை தொடர்பில் இந்தியா – இலங்கைக்கு இடையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கிடையில் டில்லியில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தை பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் வெற்றி பெறுவதில் இந்திய அரசாங்கம் வழங்கிய முழுமையான பங்களிப்புக்கு உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இதன்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு இந்திய முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள், இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துதல், குறிப்பாக இந்திய ரூபாவிலான பரிமாற்றங்கள் மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பது உள்ளிட்ட இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை முன்னெடுப்பதற்கான வழிகள் தொடர்பாக இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் இலங்கையின் பொருளாதார மீட்சியின் ஒரு பகுதியாக அமையும் என இரு தரப்பு இணக்கப்பாடு இதன்போது எட்டப்பட்டது.

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் உணவு, எரிபொருள், மருந்து கொள்வனவு உள்ளிட்டவற்றுக்காக சுமார் 400 கோடி டொலர் கடனுதவியை இந்தியா கடந்த ஆண்டு வழங்கியது.

இந்தச் சந்திப்பின்போது இதனை நினைவுகூர்ந்த உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்த சூழலில் இருதரப்பு அபிவிருத்தி பங்காளிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் உட்பட பலதரப்பு நிதி நிறுவனங்களுடன் இலங்கையின் விவகாரத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமனின் தனிப்பட்ட ஈடுபாட்டுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.