சதி செய்கின்றன எதிர்க்கட்சிகள்! பாலித குற்றச்சாட்டு

பிரச்சினைகள் அற்ற நாடாக இலங்கை கட்டியெழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், வெளிநாட்டு தூதுவர்கள் ஊடாக அதனை முறியடிப்பதற்கு எதிர்க்கட்சிகள் சதித்திட்டம் தீட்டுகின்றன.

நாட்டை நேசிப்பதாகக் கூறுபவர்களாலேயே இவ்வாறான மோசமான நடவடிக்கைகள் முன்னெடுப்படுகின்றன என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிறந்தி தினத்தை முன்னிட்டு நேற்று(வெள்ளிக்கிழமை) ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –

கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த நாடாகக் காணப்பட்ட இலங்கையை மீண்டும் உயிர்ப்பித்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆவார்.

இந்த சவாலை ஏற்பதற்கு அனைவரும் அஞ்சி ஓடிய போது , தனியொரு நபராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போராடி வெற்றி பெற்றுள்ளார்.

ஐ.தே.க. பொதுச் செயலாளராக தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நியமிப்பதற்கு கையெழுத்திடுவதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றமையை பாக்கியமாகக் கருதுகின்றேன். அவரால் நாட்டு மக்களுக்கு நிம்மதியாக சுவாசிக்கக் கூடிய சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருள்கள் , உரம் உள்ளிட்டவற்றின் விலைகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பிரச்சினைகள் அற்ற நாட்டைக் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் போது எதிர்க்கட்சிகள் வெளிநாட்டு தூதுவர்களை அவசரமாக சந்தித்து அந்த முயற்சிகளை முறியடிப்பதற்கு சதித்திட்டம் தீட்டுகின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியை காலம் தாழ்த்துமாறும், மேலும் கடுமையான நிபந்தனைகளை முன்வைக்க வலியுறுத்துமாறும் தூதுவர்களிடம் கோரியுள்ளன. நாட்டை நேசிப்பதாகக் கூறுபவர்களே இவ்வாறு செயற்படுகின்றனர். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.