சர்வதேசத்தின் ஆதிக்கத்துக்கு இலங்கை மத்தியவங்கி உட்படும்! உதய கம்மன்பில எச்சரிக்கை

மத்திய வங்கியை சுயாதீனப்படுத்துவதன் ஊடாக அது மக்களின் நிர்வாகத்திலிருந்து விலகி சர்வதேசத்தின் நிர்வாகத்துக்கு உட்படுத்தப்படும்.

இதன் மூலம் நிறைவேற்றதிகாரம், நாடாளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரம் மிக்கதாக மத்திய வங்கி மாற்றமடையும் என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி சட்டமூலத்தை சர்வசன வாக்கெடுப்பின்றி நிறைவேற்ற முடியாது என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு நேற்று (வெள்ளிக்கிழமை) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி சட்ட மூலத்தில் நிறைவேற்றதிகாரம் , சட்டவாக்க சபைக்கு அப்பால் முற்றிலும் சுயாதீன மத்திய வங்கியை ஸ்தாபிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு நிர்வாகமும் இன்றி சுயாதீன மத்திய வங்கி ஸ்தாபிக்கப்படுமானால் அதன் மூலம் அசுரன் ஒருவனே தோற்றம் பெறுவான் என உயர் நீதிமன்ற நீதியரசர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நீதியரசர்களால் இவ்வாறு பகிரங்கமாக சுட்டிக்காட்டப்பட்டமை மகிழ்ச்சியளிக்கிறது. மத்திய வங்கியை சுயாதீனப்படுத்துவதற்கான சட்ட மூலத்தின் ஊடாக நிறைவேற்றதிகாரம் மற்றும் நாடாளுமன்றத்துக்கு சமாந்தரமாக அரசமைக்கக் கூடிய அதிகாரம் கிடைக்கப்பெறும் என்பதை நாமும் இதன் போது சுட்டிக்காட்டினோம்.

இதன் ஊடாக நூல் அறுந்த பட்டம் போன்று மத்திய வங்கி இலங்கை மக்களின் நிர்வாகத்திலிருந்து விலகி , சர்வதேசத்தின் ஆட்சிக்கு உட்படும். எனவே, சர்வஜன வாக்கெடுப்பின்றி இந்த சட்ட மூலத்தை நிறைவேற்ற முடியாது என்ற தீர்ப்பை வழங்க வேண்டும் என நாம் நீதிமன்றத்திடம் கோரிக்கையை முன்வைத்துள்ளோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.