கல்வித்துறையை கட்டியெழுப்புவது சவால் மிக்கது – கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிர்காலத்தில் தீர்வு காணப்பட்டாலும் , தற்போதுள்ள கல்வி முறைமையை மீண்டும் கட்டியெழுப்புவது பாரிய சவாலாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

மாலபே பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

11, 12 மற்றும் 13ஆம் வகுப்புக்களைச் சேர்ந்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது பாடசாலைக்கு சமூகமளிப்பதில்லை. தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக பாடசாலை மீது கொண்டுள்ள நம்பிக்கையை மாணவர்கள் இழந்துள்ளனர். சகல மாணவர்களும் மேலதிக வகுப்புக்களுக்கே செல்கின்றனர். இதிலுள்ள பிரச்சினைகளை ஆழமாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எதிர்வரும் ஓரிரு வருடங்களுக்குள் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டாலும் , கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை குறுகிய காலத்திற்குள் கட்டியெழுப்புவது பாரிய சவாலாகும். வரிப் பிரச்சினைகளுக்காக சென்று பாடசாலைகளை மூடுகின்றனர். இதனால் மாணவர்கள் இழந்த மணித்தியாலங்கள் மீண்டும் கிடைக்கப் போவதில்லை.

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப்பணிகள் ஒரு மாதம் கடந்துள்ள போதிலும் , இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. மே மாதம் மத்தியில் கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறான நிலைமையில் அது சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறியாகவுள்ளது.

ஆனால் தனியார் பாடசாலைகளில் இவ்வாறு எந்த சிக்கலும் ஏற்படவில்லை. சமூகத்தில் அனைவரும் இது தொடர்பான பொறுப்பு காணப்படுகிறது. இதே முறைமையில் எத்தனை ஆண்டுகள் பயணிப்பது? கல்வி முறைமையில் மாற்றம் அத்தியாவசியமானதாகும். எனினும் அதனை செய்வது இலகுவானதல்ல.

இதே நிலைமை தொடருமானால் எதிர்வரும் 5 ஆண்டுகளின் பின்னர் எமது நாட்டிலுள்ள பட்டதாரிகளுக்கு வெளிநாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களுக்குச் சென்று உயர்கல்வியை தொடர்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்காது. உலக நாடுகளும் , இலங்கையும் கல்வி மட்டத்தில் உள்ள நிலைமைகளுக்கிடையிலான இடைவெளியை நிரப்பாவிட்டால் பொருளாதார மட்டத்தில் எந்தளவு முன்னேரினாலும் கல்வியில் முன்றே முடியாது என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.