கௌரவத்தை பாதுகாக்கவே திகதி நிர்ணயிக்காமல் தேர்தல் பிற்போட்டுள்ளது – ஜி.எல்.பீரிஸ்

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை தொடர்ந்து கேலிக்கூத்தாகக் கூடாது என்பதற்காகவும் , ஆணைக்குழுவின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழு திகதி நிர்ணயிக்காமல் தேர்தலை பிற்போட்டுள்ளது.

தேர்தலை பிற்போட்ட அரசாங்கத்துக்கு நாட்டு மக்கள் தகுந்த பாடம் கற்பித்த வரலாற்று சம்பவங்கள் பல உள்ளன என்பதை ஜனாதிபதி மறந்து விட கூடாது என பேராசிரியர் ஜி.எல் பீரிஷ் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் தொடர்ந்தும் கேலிக்கூத்தாக்க கூடாது என்பதற்காகவே தேர்தல்கள் ஆணைக்குழு திகதி நிர்ணயிக்காமல் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட்டுள்ளது.

தேர்தல் மீது மக்களின் வெறுப்பை தூண்டி விட்டு தற்போது தேர்தல் வேண்டாம் என்று நாட்டு மக்கள் குறிப்பிடும் நிலையை தோற்றுவிப்பதற்காகவே அரசாங்கம் தேர்தல் செயற்பாடுகளுக்குத் தடையாகச் செயற்படுகிறது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் விவகாரம் உயர்நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது, ஆகவே, நீதிமன்றத்தின் உறுதியான தலையீட்டுடன், நிதியமைச்சிடமிருந்து உரிய நிதியை பெற்றுக்கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளதால் சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களின் நிலை கேள்விக்குள்ளாகியுள்ளது,

ஆகவே, இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் பேச்சில் ஈடுபடத் தீர்மானித்துள்ளோம்.

நகர சபைகள் மற்றும் பிரதேச சபை சட்டத்தின் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் திகதி நிர்ணயிக்காமல் பிற்போடப்படும் போது சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களை நிபந்தனை அடிப்படையில் இணைத்துக் கொள்ள முடியும்.

1987 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டு அப்போதைய காரணிகளைக் கருத்திற் கொண்டு வாக்கெடுப்பு பிற்போடப்பட்டது. 1992 ஆம் ஆண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறும் வரை சம்பளமில்லாத விடுமுறையில் இருந்த அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளதால் சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 7 ஆயிரம் இற்கும் அதிகமான அரச சேவையாளர்களின் நிலையை கருத்திற் கொண்டு அமைச்சரவை ஒரு சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.