நாட்டின் தற்போதைய வங்குரோத்து நிலைக்கு அரச அதிகாரிகளும் பொறுப்புக்கூற வேண்டும்! சம்பிக்க கூறுகிறார்

நாடு வங்குரோத்து நிலை அடைந்தமைக்கு அரசியல்வாதிகளை போல் அரச அதிகாரிகளும் பொறுப்புக் கூற வேண்டும். கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ ஆகியோரின் நிதி,பொருளாதாரம் தொடர்பான அறிவின்மையை வியத்மக என்று குறிப்பிட்டுக் கொள்ளும் தரப்பினர் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி 55 லட்சத் குடும்பங்களை வறுமை கோட்டுக்கு தள்ளியுள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள 43 ஆவது படையணி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

நாட்டின் நிதி தொடர்பான அதிகாரம் நாடாளுமன்றத்துக்குப் பொறுப்பாக்கப்பட்டுள்ளது. நிதி கட்டமைப்பு மற்றும் நிதி முகாமைத்துவம் தொடர்பான அதிகாரம் இலங்கை மத்திய வங்கிக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. நிதி கொள்கைக்கும் மத்திய வங்கிக்கும் பரபஸ்பர வேறுபாடு நிலை காணப்படுகிறது.

உத்தேச புதிய மத்திய வங்கி சட்டத்தின் ஊடாக மத்திய வங்கியை சுயாதீனப்படுத்துவதாகக் குறிப்பிடப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு நாடு மிக மோசமான பொருளாதாரக் கொள்கையை எதிர்கொண்ட போது மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மை தொடர்பில் சாதக மற்றும் பாதகமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

மத்திய வங்கியை சுயாதீனப்படுத்தும் முயற்சிக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளது. 2003 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த அரசாங்கத்தில் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க மத்திய வங்கியை சுயாதீனப்படுத்தும் சட்டமூலத்தைக் கொண்டு வந்தார், ஆனால் அந்த முயற்சி பெற்றிபெறவில்லை.

நல்லாட்சி அரசாங்கத்தில் 2018 ஆம் ஆண்டு சட்டமூலத்தை கொண்டு வந்தார். 2019 ஆம் ஆண்டு அதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டது.

ஆனால் நாடாளுமன்றத்தின் ஊடான நிறைவேற்றப்படவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு அமைய மத்திய வங்கியை சுயாதீனப்படுத்தும் வகையில் உத்தேச புதிய மத்திய வங்கி சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த அரசாங்கம் நிதி தொடர்பில் எடுத்த தவறான தீர்மானங்களால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது.

அரசியல்வாதிகளை காட்டிலும் படித்த துறைசார் நிபுணர்கள் நாட்டை சிறந்த முறையில் நிர்வகிப்பார்கள் என்று குறிப்பிடப்படுகின்றமை தவறு என்பதை இலங்கை எடுத்துக்காட்டியுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஆட்சியமைத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ ஆகியோருக்கு பொருளாதாரம், நிதி தொடர்பில் படிப்பறிவு கிடையாது. ஆகவே அப்போதைய ஜனாதிபதியின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் திறைசேரியின் செயலாளர் ஆகிய மூவரும் தான் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகிய மூவரையும் முன்னிலைப்படுத்தி நிதி தொடர்பான தீர்மானங்களை எடுத்து நாட்டை நிர்வகித்தார்கள். பெறுபேறு நாடு வங்குரோத்து நிலை அடைந்தது.ஆகவே, அதிகாரிகளால் மாத்திரம் பொருளாதாரத்தை சிறந்த முறையில் நிர்வகிக்க முடியும் என்ற தர்க்கம் முறையற்றது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.