எரிபொருள் விநியோகத்திற்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதிக்கு வரவேற்பு! தெரிவிக்கிறார் ஹர்ஷ டி சில்வா

நாட்டில் எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதற்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது. இது தொடர்பாக முற்போக்காக சிந்திக்க வேண்டும்.

இதன் மூலம் எரிபொருள் சந்தையில் போட்டி நிலைமை அதிகரிக்கும் போது , நுகர்வோருக்கு பல நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –

எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளமை சாதகமான நடவடிக்கையாகும். எனினும் மே மாதம் மீண்டும் விலைத் திருத்தங்களை மேற்கொள்ளும் போது தற்போது குறைக்கப்பட்டுள்ள அதே மட்டத்தில் விலைகளை அதிகரிக்கக் கூடாது. மாறாக சமநிலையானதொரு விலை திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தற்போது நாட்டில் எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதற்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதனை நாம் முற்போக்காக சிந்திக்க வேண்டும். இந்த நிறுவனங்கள் 1960 களில் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை மேற்கொண்டன. எவ்வாறிருப்பினும் அதன் பின்னர் அவற்றுக்கான அனுமதி மறுக்கப்பட்டது.

எனவே, இந்நிறுவனங்கள் சிங்கப்பூரில் எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்க ஆரம்பித்தன. இதன் பிரதிபலனாகத் துளியளவும் எரிபொருள் வளமற்ற நாடான சிங்கப்பூர் எரிபொருள் விநியோக கேந்திரமாக வளர்ச்சியடைந்துள்ளது. எனவே, இவ்வாறான விடயங்கள் தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும்.

குறித்த நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கையில் ஈடுபடும் போது போட்டி அதிகரிக்கும். எனவே, எரிபொருள் விலை மற்றும் தட்டுப்பாடு இன்மை போன்று சாதகமான நலன்கள் நுகர்வோருக்குக் கிடைக்கப்பெறும்.

இவ்வாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட முன்னர் சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கமைய ஊழல் , மோசடிகளை ஒழிப்பதற்கு முன்னுரிமையளிக்க வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.