மஹிந்தவின் கருத்துக்கு அரசுக்குள் எவ்வித மதிப்பும் தற்போது கிடையாது!  அடித்துக்கூறுகின்றார் டிலான் பெரேரா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கருத்துக்கு அரசாங்கத்திற்குள் எவ்வித மதிப்பும் தற்போது கிடையாது.

பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய நாங்கள் இனியொருபோதும் பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணையப் போவதில்லை என்பதை உறுதியாகக் குறிப்பிட்டுக் கொள்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

சுதந்திர மக்கள் கூட்டணி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை எந்தத் தேர்தலையும் நடத்த இடமளிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு ஜனாதிபதி செயற்படுகிறார்.

அரசாங்கத்தின் தேவைக்கு அமைய தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது, ஜனாதிபதி தேர்தலைக் காண்பித்து உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்தாமலிருக்க இடமளிக்க முடியாது.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து உள்ளூராட்சிமன்றத் தேர்தல் உரிமையை பெற்றுக்கொள்ள அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட வேண்டும். தேர்தல் செயற்பாடுகளுக்கு ஏற்பட்டுள்ள தடைகளுக்கு தீர்வு கானும் நோக்கம் அரசாங்கத்துக்குக் கிடையாது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தின் ஊடாக வலுவான தடை ஏற்படுத்த அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது, ஆகவே தற்போதைய நிலையில் சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பொறுப்புடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிடும் கருத்துகளுக்கு அரசாங்கத்திற்குள் தற்போது மதிப்பு கிடையாது. பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகியவர்கள் மீண்டும் அரசாங்கத்துடன் ஒன்றிணைவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி தற்போது சுயாதீனமாகச் செயற்படும் தரப்பினர் எவரும் பொதுஜன பெரமுனவுடன் இனி ஒன்றிணையப் போவதில்லை என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.