புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்துவோம்! ஜி.எல்.பீரிஸ்

நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை காட்டிலும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் அபாயகரமானது.

ஜனநாயகம், மனித உரிமை ஆகிய அடிப்படை அம்சங்களுக்கு எதிரான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆகவே, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை உயர் நீதிமன்றில் சவாலுக்குட்படுத்துவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு –

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை நீதி மற்றும் அரசமைப்பு அமைச்சர் என்ற ரீதியில் சமர்ப்பித்தேன்.

நாடு வங்குரோத்து நிலையை அடைவதற்கு நிதி மோசடி பிரதான காரணியாக உள்ளது.

ஊழல் ஒழிப்புக்கு எதிராக பல சட்டங்கள் நாட்டில் உள்ளன. ஆனால், அந்த சட்டங்கள் முறையாக செயற்படுத்தப்படுகின்றனவா என்பது பிரச்சினைக்குரியதாக உள்ளது.

நாட்டு நலனுக்காக இயற்றப்பட்ட சட்டங்கள் முறையாக செயற்படுத்தப்பட்டால் எந்த பிரச்சினையும் தோற்றம் பெறா.

நாட்டில் சுயாதீன ஆணைக்குழு என்பதொன்று கிடையாது. சுயாதீனம் என்பது பெயரளவில் மாத்திரம் குறிப்பிடப்படுகிறது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவை குறிப்பிட வேண்டும்.

அரசமைப்பின் 17 ஆவது திருத்தத்தில் சுயாதீன தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிமுகப்படுத்தப்பட்டு, 21 ஆவது திருத்தம் வரை தொடர்கிறது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனம் இல்லை என்பது நடைமுறை நிலைவரங்கள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது நடக்கும் என்று குறிப்பிட முடியாத அளவுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி நடைமுறைக்கு சாத்தியமான வகையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை உருவாக்குமாறு சர்வதேசம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில், மீண்டும் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை காட்டிலும் இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மிகவும் பாரதூரமானது. ஜனநாயகம், மனித உரிமைகள் ஆகிய அடிப்படை அம்சங்களுக்கு எதிரான விடயங்களை மாத்திரம் கொண்டுள்ளது.

அரசாங்கத்துக்கு எதிராக நாட்டு மக்கள் போராட்டங்களில் ஈடுபட முடியாது. நாட்டின் இறையாண்மைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுவது பயங்கரவாத செயற்பாடாகக் கருதப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இறையாண்மை என்ற பதத்துக்குள் உள்ளடங்கும் விடயங்கள் தொடர்பில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

அரசாங்கம் கருதும் அனைத்து விடயங்களும் இறையாண்மைக்குள் உள்வாங்கப்படலாம். இது மிகவும் பாரதூரமானது. அரசாங்கத்துக்கு எதிராக செய்தி வெளியிடும் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கப்படுவார்கள்.

நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைதுசெய்யப்படும் ஒருவருக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு உண்டு. ஆனால், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் இந்த அதிகாரம் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்படவுள்ளது.

நாட்டின் பொலிஸ் சேவை தொடர்பில் மக்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள். மறுபுறம், பொலிஸ் உயர் அதிகாரிகள் தொடர்பில் பாரிய மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன. ஆகவே, தடுப்புக்காவல் பிறப்பிக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்குவது சிறந்த அறிகுறியாக அமையாது.

நாட்டு மக்களின் ஜனநாயகத்தை முழுமையாக இல்லாதொழிக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவோம்.

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்காக கடினமான தீர்மானங்களை செயற்படுத்துகிறோம் என குறிப்பிட்டுக்கொண்டு அரசாங்கம் முன்னெடுக்கும் ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்