சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக இலங்கை அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்த முயல்கின்றது – பிரித்தானிய தமிழர் பேரவை

பலதசாப்த காலமாக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கு தென்னாபிரிக்கா பாணியிலான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் மாதிரியை பயன்படுத்த இலங்கை அவசரப்படுவது சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் ஒரு முயற்சி என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

தமிழ்மக்களின் இனப்படுகொலை யுத்தக் குற்றங்கள் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் செயற்பாடுகள் மிக முக்கியமான கட்டத்தை அடைந்துகொண்டிருக்கும் தருணத்தில் இலங்கை தென்னாபிரிக்க பாணியை பின்பற்ற முயல்கின்றது எனவும் பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்க பாணியை இலங்கை பின்பற்றினால் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை இலங்கை மேலும் பல வருடங்களுக்குத் தொடரமுடியும் எனவும் பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இலங்கையின் அரசியல் வரலாற்றை அறிந்தவர்களுக்கு குறிப்பாக சீருடை மற்றும் காவி உடை அணிந்தவர்களின் குற்றங்களைப் பாதுகாக்கும் இலங்கை அரசாங்கத்தின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் இந்த வகையான சூழ்ச்சிகள் புதியவை அல்ல எனவும் பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இலங்கையின் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கும் கலாசாரம் மற்றும் பேரினவாத பௌத்த மதகுருமாரைப் பாதுகாப்பது தொடர்பாக அதன் வரலாறு சுயவிளக்கமளிக்கும் விதத்தில் காணப்படுகின்றது எனவும் பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இலங்கை தானாகவே உருவாக்கிக்கொண்ட பொருளாதார வீழ்ச்சி குறித்து உலகம் பெருமளவிற்கு அனுதாபம் கொண்டுள்ள போதிலும் இலங்கையின் தமிழ் மக்கள் பொருளாதாரம் கழுத்தை நெரித்தல் மற்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒடுக்குமுறை என்ற இரட்டை முனை கொண்ட வாளை எதிர்கொள்கின்றனர் என்பதை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ளத் தவறிவிட்டது எனவும் பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இராணுவமயமாக்கல் (19 படையணிகளில் 16 படையணிகள் தமிழர் தாயாகத்திலேயே உள்ளன,) தமிழர்தொல்பொருள்கள் அழிக்கப்படுதல் வரலாற்று ரீதியாக இந்து கோவில்கள் காணப்படும் பகுதிகளில் பௌத்த ஆலயங்கள் பெருமளவில் ஏற்படுத்தப்படுதல், தமிழ் விவசாயிகளின் நிலங்கள் அபகரிக்கப்படுதல், தமிழ் மக்களின் வாழ்வாதாரம் ஸ்திரமிழக்க செய்யப்படுதல், தமிழ் மக்களை அவர்களின் தாயகத்திலேயே பகைத்தல், இலங்கையில் தமிழ் மக்கள் இன்னமும் எதிர்கொள்ளும் முடிவற்ற நெருக்கடிகளாகக் காணப்படுகின்றன என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இவை அனைத்தும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி என்ற போர்வையின் கீழ் மூடிமறைக்கப்படுகின்றன எனவும் பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் தனது தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் வரலாற்றை மூடி மறைப்பதற்காக ஆணைக்குழுக்களையும் விசாரணைகளையும் தனது தீமைகள் மறக்கப்பட்டு மறையும் வரை அதற்கான கால அவகாசத்தை பெறுவதற்காக பயன்படுத்தியுள்ளது எனவும் பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இதற்கு அப்பாலும் இலங்கையின் இரு அமைச்சர்கள் தென்னாபிரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். இலங்கை விவகாரத்துக்கு தீர்வைக் காண்பதற்கு தென்னாபிரிக்க பாணியை எவ்வாறு பயன்படுத்துவது என ஆராய்வதற்காகவே இந்த கற்றல் பயணம் என பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர் எனவும் பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

அத்தகைய முயற்சி புரளியை தவிர வேறு இல்லை. சர்வதேச சமூகத்தைக் குறிப்பாக எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வுகளில் முக்கியமான முடிவுகளை எடுக்கப்போகும் நாடுகளை ஏமாற்றுவதற்கான முயற்சியே இது எனவும் பிரித்;தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்