பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரத்தினை வழங்குவதே உண்மை, நல்லிணக்க ஆணைக்குழுவின் இலக்கு – அலி சப்ரி
உண்மை, மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை விரைந்து ஸ்தாபிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அந்த ஆணைக்குழு வெறுமனே பரிந்துரைகளை மட்டும்செய்யாது, பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரத்தை வழங்கும் வகையிலான பொறிமுறையைக் கொண்டமையவுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவுக்கான விஜயம் மற்றும் உண்மை, நல்லிணக்க ஆணைக்குழு அமைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேலும் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
தென்னாபிரிக்காவுக்கு அண்மையில் விஜயம் செய்தபோது அந்நாட்டின் ஜனாதிபதி சிறில் ரமபோஷ, முன்னாள் ஜனாதிபதி எம்பகி, அரசமைப்பு முன்னாள் அமைச்சர் மிச்சல் மசுதா மற்றும் தற்போதைய வெளிவிகார அமைச்சர், நீதி அமைச்சர் உள்ளிட்டவர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு நீண்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தோம்.
இந்தக் கலந்துரையாடல்களின் போது தென்னாபிரிக்காவின் அனுபவத்தின் அடிப்படையில் உள்நாட்டில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்குரிய பல்வேறு உள்ளீடுகளை நாம் பெற்றுக்கொண்டுள்ளோம்.
அந்த வகையில் விரைவில் உள்நாட்டில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பொறிமுறையொன்றை ஸ்தாபிக்கவுள்ளோம். அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆணைக்குழு, கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட ஆணைக்குழு போன்று பரிந்துரைகளை மட்டும் முன்மொழிவதற்காக அமைக்கப்படவில்லை. உண்மையில் இந்த ஆணைக்குழுவின் ஊடாக பாதிக்கப்பட்ட எந்தவொரு பொதுமகனுக்கும் பரிகாரத்தை வழங்குவதற்கே முயற்சிகளை எடுப்பதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம்.
குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்கள் தமக்கு நடைபெற்ற அநீதிகளை வெளிப்படையாகத் தெரிவித்துக்கொள்ள முடியும். அதன் மூலம் அவர்கள் இழப்பீட்டையோ, அல்லது காணாமலாக்கப்பட்ட உறவினர்கள் பற்றிய சான்றிதழையோ அல்லது இறப்புச் சான்றிதழையோ பெறவிரும்புவார்களாயின் அதற்குரிய அணுகுமுறைகளைச் செய்ய முடியும்.
அதேநேரம், அவர்கள் குறித்த நபர் மீதோ, அல்லது குழுவினர் மீதோ நீதிவிசாரணைகளைக் கோருவார்களாக இருந்தால் அதற்குரிய சான்றதாரங்களின் அடிப்படையில் அவற்றை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்களை எடுக்க முடியும்.
அதேநேரம், இந்த ஆணைக்குழுவின் முன்னால் தோன்றி பொதுமன்னிப்புக் கோருபவர்கள் கூட அதற்குரிய நடைமுறைகளைப் பின்பற்ற முடியும்.
இவ்வாறானதொரு செயற்பாடுகள் நிறைந்ததனவாகவே குறித்த ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு எதிர்பார்கின்றோம். அத்துடன், தென்னாபிரிக்காவின் மேலதிக அனுபவங்களையும் தொடர்ந்தும் பகிர்ந்து கொள்வதற்கும் எதிர்பார்த்துள்ளோம்.
இந்த பொறிமுறையை ஸ்தாபிப்பதன் ஊடாக இனங்களுக்கு இடையில் காணப்படுகின்ற முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளியை வைக்க முடியும் என்பதும் எதிர்பார்ப்பாகவுள்ளது. – என்றார்.
கருத்துக்களேதுமில்லை