உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடை சட்டம் திருத்தம் செய்யப்படும் – சாகர காரியவசம்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டத்தில் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான விடயங்கள் ஏதும் காணப்படுமாயின் அதனை நாடாளுமன்றத்தின் ஊடாக திருத்தியமைப்போம்.

ஊழல் ஒழிப்பு சட்டத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் 2024 ஆம் ஆண்டு இறுதி பகுதியில் இடம்பெறும்.

ஜனாதிபதி தேர்தலை விரைவாக நடத்த வேண்டிய தேவை ஏதும் தற்போது கிடையாது. அரசமைப்பின் பிரகாரம் மாகாண சபைகள் தேர்தல் மற்றும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும்.

தேர்தலை பிற்போட வேண்டிய தேவை எமக்குக் கிடையாது. கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராகவே உள்ளோம். எந்தத் தேர்தல் இடம்பெற்றாலும் வெற்றிகரமாக அதனை எதிர்கொள்வோம். பெரும்பாலான மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவார்கள்.

ஊழல் ஒழிப்பு சட்டமூலம் இம்மாத காலத்துக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். குறுகிய அரசியல் நோக்கத்துக்காக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் இந்த சட்டமூலத்தின் ஊடாக விசேட கவனம் செலுத்தப்படும்.

ராஜபக்ஷர்களை திருடர்கள் என விமர்சித்து ஒருதரப்பினர் அரசியல் இலாபம் தேடிக் கொண்டார்கள். நல்லாட்சி அரசாங்கத்தில் எந்த குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை.

ஊழல் ஒழிப்பு தொடர்பில் எவ்வித சட்டங்களும் இயற்றப்படவில்லை. தற்போது பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் ஊழல் ஒழிப்பு சட்டம் உருவாக்கப்படவுள்ளதையிட்டு பெருமையடைகிறோம். ஆகவே, ஊழல் ஒழிப்பு சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்குவோம்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டமூலம் தொடர்பில் தற்போது பல்வேறு மாறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரான அம்சங்கள் ஏதும் குறித்த வரைபில் காணப்படுமாயின் அதனை நாடாளுமன்றத்தின் ஊடாக திருத்தியமைப்போம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.