நிதியமைச்சின் செயலரின் செயற்பாட்டால் பாராளுமன்றின் அதிகாரம் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது – மத்தும பண்டார

நிதியமைச்சின் செயலரின் தன்னிச்சையான செயற்பாட்டால் நாடாளுமன்றத்தின் அதிகாரம் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளதால், எனது நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது.

ஆகவே அவருக்கு எதிராக சிறப்புரிமை மீறல் முறைப்பாட்டை முன்வைப்பதாக குறிப்பிட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சிறப்புரிமை மீறல் முறைப்பாட்டை சபையில் முன்வைத்தார்.

நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை மீறல் தொடர்பான முறைப்பாட்டை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

நிதி சட்டத்தின் 108 ஆவது உறுப்புரையின் பிரகாரம் நாட்டின் நிதி அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு முதல் காலாண்டுக்குள் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு 2023 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டது.

அரசமைப்பின் பிரகாரம் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இதுவரை நடத்தப்படவில்லை. நிதி நெருக்கடி காரணமாக தேர்தல் இன்றும் இழுபறி நிலையில் உள்ளது.

நாடாளுமன்றத்தால் ஒதுக்கப்பட்ட நிதியை திறைசேரியின் செயலாளர் விடுவிக்காமல் தன்னிச்சையான முறையில் செயற்படுகிறார்.

திறைசேரி செயலாளரின் செயற்பாடுகளால் நாடாளுமன்றத்தின் அதிகாரம் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளதால் எனது நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது.

ஆகவே திறைசேரியின் செயலாளருக்கு எதிராக நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல் முறைப்பாட்டை முன்வைக்கிறேன். – என்றார்.

முன்வைக்கப்பட்ட சிறப்புரிமை மீறல் முறைப்பாடு நாடாளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமை தொடர்பான குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ சபைக்கு அறிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.