அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்துவோம் – லக்ஷ்மன் கிரியெல்ல

சட்டத்தின் ஆதிக்கத்தை மீறி செயற்படும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்துவோம்.

அத்துடன் எதிர்க்கட்சியின் ஆலோசனைகளை மதிக்காமல் செயற்பட்டதாலே நாடு வங்குரோத்து நிலைக்கு செல்ல காரணமாகும் என எதிர்க்கட்சியின் பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

சர்வதேச நாணய நிதியம் முதலாம் கட்ட கடன் உதவியை வழங்கும்போது எமக்கு வழங்கிய நிபந்தனைகளில் பிரதானமானது சட்டத்தின் ஆதிபத்தியத்தை பாதுகாக்க வேண்டும் என்பதாகும். ஆனால் அரசாங்கம் சட்டத்துக்கு முரணாக தேர்தலை பிற்போட்டு இருக்கிறது.

தேர்தலை நடத்துமாறு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை அரசாங்கம் மீறி இருக்கிறது. நீதிபதிகளை, தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை, ஊடகவியலாளர்களை நாடாளுமன்றத்தின் சிறப்புரிமை குழுவுக்கு அழைத்து சட்டத்தின் ஆதிக்கத்தை மீறி இருக்கிறது.

அதேபோன்று அமைதிப் பேரணி மீது தாக்குதல் நடத்தி இரண்டு உயிர்களை பலி எடுத்திருக்கிறது. 2019 இல் இருந்து அரசாங்கம் இதனையே செய்து வருகிறது.

அத்துடன் எதிர்க்கட்சியின் ஆலோசனைகளைக் கேட்பதற்கு இந்த அரசாங்கம் தயார் இல்லை. 19 ஆம் திருத்தத்தின் நல்ல விடயங்களை நீக்க வேண்டாம் என நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தோம்.

ஆனால் 20 ஆம் திருத்தத்தைக் கொண்டு முற்றாக அதனை இல்லாமலாக்கினார்கள். ஆனால் 21ஆம் திருத்தத்தை கொண்டுவந்து மீண்டும் 19 ஐயும் பலப்படுத்தும் வகையில் திருத்தம் மேற்கொண்டோம்.

அத்துடன் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துக்கு வழங்கிய வாக்குறுதியை மீறி செயற்பட்டு வருகின்றது, அதனால் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் அடுத்த மாதம் இலங்கை வர இருக்கின்றனர்.

இதன்போது அரசாங்கம் தேர்தலை பிற்போட்டிருப்பது, நீதிபதிகளை நெருக்கடிக்கு ஆளாக்கி இருப்பது. தேர்தல் ஆணைக்குழு மற்றும் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிவரும் அழுத்தங்கள் தொடர்பில் தெரிவிப்போம்.

மேலும் சிவில் அமைப்புகளுடன் இணைந்து செயற்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருக்கிறது. ஆனால், அவர்களுடன் எந்த கலந்துரையாடலையும் அரசாங்கம் மேற்கொள்வதில்லை.

சாதாரண மக்களின் அழுத்தங்களைக் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என சர்வதேச அமைப்புகள் அனைத்தும் தெரிவித்திருக்கின்றன. தேர்தலை நடத்துமாறு மல்வத்து, அஸ்கிரிய பீடங்கள் மற்றும் கர்தினாலும் தெரிவித்திருக்கின்றார்.

ஆனால் அரசாங்கம் எந்த பதிலையும் வழங்காமல் இருக்கிறது. எனவே தேர்தலுக்கு சென்று மக்கள் ஆணை எதுவாக இருந்தாலும் அதற்கு தலைசாய்த்து செயற்பட அனைவரும் ஒன்றுபட வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.