புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை தோற்கடித்தே ஆக வேண்டும் – விஜித்த ஹேரத்

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஊடாக மக்களின் ஜனநாயக உரிமை மீறப்படுவதுடன் அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அத்துடன் மக்களை கடும் அடக்குமுறைக்கு தள்ளிவிடுவதற்கு ஜனாதிபதிக்கு இதன் மூலம் முடியுமாகிறது.

அதனால் இந்த சட்டமூலத்தை தோற்கடித்தே ஆகவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் ஊடக பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டை தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் –

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பொதுவாக அனைவருக்கும் பாதிப்பாக அமைகிறது. அரசாங்கத்துக்கு ஒன்றை செய்யுமாறு தெரிவித்தாலும் அல்லது செய்ய வேண்டாம் எனத் தெரிவித்தாலும் அது பயங்கரவாத செயலாகவே பார்க்கப்படும்.

உதாரணமாக விவசாயிகள் உரம் கேட்டு போராடினால் அதற்கு எதிராக செயற்பட முடியும். வரி குறைக்குமாறு போராடினால் அதற்கு எதிராக செயற்பட முடியும். தொழிற்சங்க உறுப்பினர்களுக்கோ அல்லது மக்கள் கூட்டமொன்றுக்கு ஒன்றாக கூட முடியாது.

அத்துடன் கடந்த காலங்களில் காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இதன் பின்னர் முன்னெடுக்க முடியாது. அதேபோன்று ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் கடும் அழுத்தங்கள் இருக்கின்றன.

முகப்புத்தகம், ருவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அரசாங்கத்துக்கு விரோதமான கருத்துக்களை தெரிவிக்க முடியாமல் போன்றன. இராணுவத்தினருக்கு நபர்களைக் கைதுசெய்ய முடியுமாகிறது.

மேலும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஊடாக ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டை முறையாக தாக்கல் செய்யாமல் 3 மாதங்களுக்கு அவரை தடுத்துவைக்க முடியும்.

இந்த குற்றச்சாட்டை அதன் பின்னரும் முறையாக தாக்கல் செய்ய முடியாமல் போனால் நீதிமன்றம் ஊடாக மேலும் 3 மாதங்களுக்கு நீடித்துக்கொள்ள முடியும்.

அத்துடன் அத்தியாவசிய சேவைகளுக்குத் தடை ஏற்படும் வகையில் கருத்துக்களை தெரிவிக்க முடியாது. உதாரணமாக, தொழிற்சங்க போராட்டம் ஒன்றை மேற்கொண்ட பின்னர் அது தொடர்பில் ஊடகவியலாளருக்கு எழுத முடியாது.

அரசியல்வாதிகளுக்கும் வெளியில் கருத்து தெரிவிக்க முடியாது. இதன் ஊடாக மக்களை கடும் அடக்குமுறைக்கு தள்ளி விடுவதற்கு ஜனாதிபதிக்கு முடியுமாகிறது.

அதனால் இந்த புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அனுமதிக்கப்பட்ட பின்னர், சாப்பிடுவதற்கும் அரசாங்கத்தின் புகழ் பாடுவதற்கும் மாத்திரமே மக்களுக்கு வாய் திறக்க முடியுமாகிறது.

அதனால் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மக்களின் ஜனநாயக உரிமைக்கு விரோதமாகவே அமைந்துள்ளது. எனவே இந்த சட்டமூலத்தை நிச்சியமாக தோற்கடித்தே ஆகவேண்டும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்