இந்து விக்கிரகங்களை உடைப்பதற்கு எவ்வாறு ஜனாதிபதி அனுமதித்தார்? சிறிதரன் கேள்வி

”விக்கிரகங்களை யாரும் வலுக்கட்டாயமாக வைக்க முடியாது என்று கூறுகின்ற ஜனாதிபதி ஏற்கனவே உள்ள விக்கிரகங்களை உடைப்பதற்கு எவ்வாறு அனுமதிகளை கொடுத்துள்ளார் ” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முரசுமோட்டை வட்டார கிளையின் புதிய நிர்வாகத் தெரிவு முரசுமோட்டை முருகன் கோவில் முன்றிலில் நடைபெற்றுள்ளது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்நது உரையாற்றுகையில் –

நாட்டின் ஜனாதிபதி , யாரும் விக்கிரகங்களை வலுக்கட்டாயமாக வைக்க முடியாது என்று குறிப்பிடுகிறார்.

இவ்வாறு கூறுகின்ற ஜனாதிபதி ஏற்கனவே பாரம்பரியமாக வழிபட்டு வந்த விக்கிரகங்களை உடைப்பதற்கான அனுமதிகளை கொடுக்கின்றார்.

குறிப்பாக குருந்தூர்மலையிலே நீதிமன்றம் பிறப்பித்த கட்டளையை மீறி விகாரை அமைக்கப்படுகின்றது.

வெடுக்குநாறி மலையிலே விக்கிரகங்கள் உடைக்கப்பட்டுள்ளன இவ்வாறு தமிழர் வழிபாட்டிடங்களில் விகாரை அமைப்பதற்கு அவர் அனுமதித்துள்ளார்.

சிங்கள பௌத்த பேரினவாதம் எதைச் செய்தாலும் அவர் மௌனமாக இருப்பார். ஆனால் தமிழர்கள் எதையும் போய் செய்யக்கூடாது என்றும் அவ்வாறு செய்தால் அது வலுக்கட்டாயம் என்றும் தடுத்து வருகின்றனர்.

இவ்வாறான ஒரு நெருக்கடிக்குள் தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நாங்கள் எங்களுக்கான சுயாட்சியை நிறுவுவதற்காக நீண்ட நெடுங்காலமாகப் போராடி வருகின்றோம். அதற்காக பல்லாயிரக்கணக்கான உயிர்களை விலையாக கொடுத்திருக்கின்றோம். பலரை இழந்திருக்கின்றோம். பெறுமதி மதிப்பட முடியாத சொத்துக்களை இழந்திருக்கின்றோம்.

இதையெல்லாம் கடந்தும் இந்த மண்ணில் எமக்கான விடுதலை நோக்கிய பயணத்தில் ஒன்று சேர வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் எமது அடையாளங்களை நாங்கள் பேண வேண்டும் என்பது எமக்கு முன்னால் உள்ள வரலாற்று ரீதியான கடமையாகும்.

மக்களை ஒரு குழப்பகரமான நிலையில் வைத்திருக்க வேண்டுமென்பதற்காக இளைஞர்களிடத்திலே ஒரு புதிய விதமான பிரச்சினை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

அதாவதுஇப்பொழுது போதைப்பொருள் பாவனையினால் பல்வேறுபட்ட வன்முறை சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன.

குறிப்பாக தாய் தந்தை பிள்ளைகளை கொலை செய்தல் போதைப் பொருள் பாவனைகளால் கலாசார சீரழிவு என பல்வேறு விதத்திலே எங்களுடைய இளம் சமூகம் சீரழிக்கப்படுகின்றது.

அதைவிட தற்போது பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. இதை பலர் எதிர்க்கின்றனர்.

குறிப்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, இதேபோல பலரும் எதிர்த்திருக்கின்றார்கள். உலக நாடுகள் பல எதிர்த்திருக்கின்றன.

இந்த அரசாங்கம் கொண்டுவரப் போகின்ற பயங்கரவாத தடைச் சட்டம் என்பது மிக மோசமானது ஒன்று கூடுவதோ அல்லது உரிமைகள் பற்றி பேசுவதற்கோ முடியாது.

எங்களது உரிமைகள் பற்றி பேச முடியாது. இவ்வாறு பெரும் நெருக்கடிகளை தோற்றுவித்து மக்களை ஒரு நெருக்கடி நிலைக்குள் தள்ளி கொடுங்கோல் ஆட்சி மேற்கொள்ளவே இந்த அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. – என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.