உறுதியான தீர்மானங்களை அறிவித்தால் தேர்தலை ஓரிருமாதத்துக்குள் நடத்தலாம்!  நிமல் புஞ்சிஹேவா கூறுகிறார்

நிதி நெருக்கடியால் நாடாளுமன்ற தேர்தல், ஜனாதிபதி தேர்தல் ஆகியவற்றை நடத்த முடியாது என்ற நிலை தோற்றம் பெற்றால் ஜனநாயகம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும்.

அது தவறான தீர்மானங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமையும். நிதி விடுவிப்பு தொடர்பாக அரசாங்கம் உறுதியான தீர்மானத்தை அறிவித்தால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஓரிரு மாதங்களுக்குள் நடத்த முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தனியார் தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய கலந்துரையாடலின்போது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் –

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். தவிர்க்க முடியாத காரணிகளால் ஆணைக்குழு எடுத்த தீர்மானங்களை செயற்படுத்த முடியாத நிலை தோற்றம் பெற்றுள்ளது. தேர்தல் விவகாரம் இழுபறி நிலையில் உள்ளமை கவலைக்குரியது.

நிதி நெருக்கடி காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளது. பிரதமருடன் இடம்பெற்ற பேச்சின் போது நிதி விடுவிப்பு தொடர்பில் உறுதியான தீர்மானத்தை அறிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளோம்.

நிதி தொடர்பில் சாதகமான தீர்மானம் கிடைக்கப் பெற்றால் அதனை அடிப்படையாக கொண்டு தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். ஓரிரு மாதங்களுக்குள் தேர்தலை நடத்த முடியும்.

நிராகரிக்கப்படும் வேட்பு மனுக்களை ஒரு தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தும்போது ஆணைக்குழு சார்பில் சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாவார். ஆனால், தற்போது அவ்வாறான நிலை இல்லை. இதனை பிரதான குறைபாடாகக் கருதுகிறோம்.

பிரதமர் தலைமையில் இடம்பெற்ற பேச்சின்போது இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளோம். சட்டமா அதிபர் முன்னிலையாகாதபோது தனிப்பட்ட சட்டத்தரணியை முன்னிலைப்படுத்த வேண்டும். அது நடைமுறைக்கு சாத்தியமற்றதாக உள்ளது.

2023 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட 10 பில்லியன் ரூபாவை நிதியமைச்சு விடுவித்தால் எவ்வித முரண்பாடுகளும் தோற்றம் பெறா.

நாட்டின் நிதி அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உண்டு. கடந்த காலங்களில் எரிபொருள் விலை தொடர்பில் உயர் நீதிமன்றம் விடுத்த உத்தரவு நாடாளுமன்றத்தால் செயற்படுத்தப்படவில்லை. ஆகவே, நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கும், நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளுக்கும் இடையில் ஒருசில வரையறைகள் காணப்படுகின்றன.

நிதி நெருக்கடியால் தேர்தலை நடத்த முடியாது என்பது நாட்டில் வழக்கமாகிவிட்டால் ஜனநாயகம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும்.

தேர்தல் தொடர்பில் மக்களின் நம்பிக்கை சிதைவடையும். நிதி இல்லாத காரணத்தால் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியாது என்ற நிலை தோற்றம் பெற்றால் அது தவறானதொரு நிலைக்கு எடுத்துக்காட்டாக அமையும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.