ரயிலில் மோதுண்டு ஒருவர் பரிதாப பலி!

ரயிலில் மோதி 45 வயதுடைய நபரொருவர் பலியாகியுள்ளார் என சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

சந்திவெளி – ஜீவபுரம் பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி வரதராசா எனும் 45 வயதுடைய நபரே ரயிலில் மோதுண்டு பலியாகியுள்ளார்.

கடற்தொழிலில் ஈடுபடும் இவர் மது போதைக்கு அடிமையானவராக இருந்துள்ளார்.

வழமையாக காலையில் கடலுக்கு சென்று மாலையில் வீடு திரும்பும் இவர், சிலநாள்களில் இரவு நேரத்திலும் கடலுக்கு சென்று வருவார்.

சம்பவ தினமான 11  ஆம் திகதி இரவு 08.45 மணியளவில் அதிகரித்த போதையுடன் கடலுக்கு சென்றுவருவதாக கூறிச்சென்ற இவர் ஜீவபுரம் ரயில் பாதையில் அமர்ந்திருந்த போது, கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற  ரயில் இரவு 10.00 மணியளவில் அப்பாதையால் வருவதை கண்டு எழுந்து செல்ல முயற்சித்தபோதும், அதிக போதை சுயகட்டுப்பாட்டை இழக்க வைத்ததால் அவ்விடத்திலேயே ரயிலில் மோதுண்டு தலை, கழுத்து,  நெஞ்சு பகுதிகள் ரயிலில் சிக்கி கை, கால்கள் உடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

இவரது சடலத்தை அணிந்திருந்த ஆடைகளை வைத்தே உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

சடலம், அதே ரயில் மூலம் ஏறாவூர் ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

சந்திவெளி பொலிஸ் பொறுப்பதிகாரியின் அழைப்பின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் விசாரணைகளை முன்னெடுத்து பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு செல்ல பொலிஸாரைப் பணித்தார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்ற 3 ஆம் திகதியும் இதே விதமான மரணமொன்று சந்திவெளி பொலிஸ் பிரிவு முறக்கொட்டாஞ்சேனையில் பதிவானதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.