சோகங்களை தீர்க்கும் வருடமாக சோபகிருது வருடம் அமையட்டும்! கலாநிதி ஆறு.திருமுருகன் பிரார்த்தகை

அன்பர்கள் அனைவருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக. சோபகிருது வருடம் எங்கள் சோகங்களை தீர்க்கும் வருடமாக அமைய வேண்டும் என அனைவரும் பிரார்த்திப்போம்.

– இவ்வாறு தனது புத்தாண்டு பிரார்த்தனை செய்தியில் தெரிவித்துள்ளார் துர்க்காதேவி தேவஸ்தானம் சிவபூமி அறக்கட்டளை ஆகியவற்றின் தலைவரும் அகில இலங்கை இந்துமா மன்றத்தின் உபதலைவருமாகிய செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன்.

அவரது பிரார்த்தனை செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு –

புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் அனைத்து சைவ அன்பர்களும் திருக்கோவில்களுக்குச் சென்று குடும்பமாக பிரார்த்தனை செய்யுங்கள்.

வீட்டிலும் மூத்தோரை நாடி அனைவரும் வீழ்ந்து வணங்கி அவர்களின் பரிபூரணமான ஆசியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

உற்றார் உறவினர் நணபர்களின் வீடுகளுக்குச் சென்று அன்பைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உறவினர்களின் உறுதுணையை வளர்த்துக் கொள்ளுங்கள். எங்கள் குழந்தைகள் இயல்பாகவே எமது பண்பாட்டைக் கற்றுக் கொள்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்துங்கள்.

புது வருடம் பிறக்கின்றபோது எம் உள்ளத்தில் புதிய சிந்தனைகளை தோற்றுவித்து அவை வெற்றி பெறுவதற்கு வழி செய்யுங்கள். கோபங்களை மறந்து அன்பைப் பெருக்கி அனைவரையும் ஆற்றுப்படுத்துங்கள். எங்கள் ஆதிச் சமயமாகிய சைவ சமயத்துக்கு வரும் இடையூறுகளைக் கண்டு அச்சப்படாதீர்கள். எங்கள் சமயம் என்றும் நிரந்தரமாக நிலைபெற்றுச் சிறக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

எனவே புத்தாண்டு நாளில் நாம் வணங்கும் தெய்வங்களை நன்றாக வேண்டுவோம். எங்களைச் சூழ்ந்துள்ள இடையூறுகள் அற்றுப்போக வேண்டுவோம். அனைத்து தமிழ் தலைவர்களும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக செயற்பட பிரார்த்திப்போம். வைத்திய சாலைகளிலும் வீடுகளிலும் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள அன்பர்கள் அனைவரும் நலம்பெற இறைவனை மன்றாடுவோம். இப்புதிய ஆண்டு எம்மண்ணில் நல்லவை நடைபெற மீண்டும் பிரார்த்தித்து அனைவருக்கும் நல்லாசிகள் கூறி அமைகிறேன். – என்றுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.