பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக மக்கள் ஆழமாக சிந்திக்க வேண்டும் – இம்தியாஸ்

தேசிய பாதுகாப்பு என்ற பேரில் அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளது. அதனால் இந்த சட்டமூலம் தொடர்பாக மக்கள் ஆழமாகச் சிந்தித்து செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.

அரசாங்கம் வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் –

நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது.அதனால் அதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். என்றாலும் அரசாங்கம் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டுவந்திருக்கிறது. தற்போது இருக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு நாட்டு மக்கள் தெரிவித்து வந்ததுடன் சர்வதேச அழுத்தங்களும் ஏற்பட்டுவந்தன. அதன் பிரகாரமே தற்போது பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

அத்துடன் பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரும்போது 6 மாத காலத்துக்கு இதனை கொண்டுவருவதாகவே அப்போதைய ஆட்சியாளர்கள் தெரிவித்துவந்தனர். ஆனால் தற்போது பல வருடங்களாக இது அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சட்டம் தேசிய பாதுகாப்பை பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறதா அல்லது அரசியல் எதிர்கருத்துடையவர்களை அடக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறதா என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

அதேபோன்று பயங்கரவாதத் தடைச்சட்டம் சிறுபான்மை இனத்தவர்களை அடக்குவதற்கு பயன்படுதப்படுவதாகவும் பரவலாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், வடக்கில் இருந்து வந்த கவிஞருக்கு இடம்பெற்ற அநியாயம் எமக்குத் தெரியும். பயங்கரவாதத் தடைச்சட்டத்தை துஷ்பிரயோகம் செய்து பல வருடங்களாக அவர்களை எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் சிறையில் அடைத்து வைத்தார்கள். பின்னர் அவர்கள் எந்த குற்றமும் இல்லாமல் விடுதலை செய்யப்பட்ட பின்னர் அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையே இருந்து வருகிறது.

அதனால் மனித உரிமை, ஜனநாயக உரிமையை மீறும் இந்த சட்டத்துக்கு பதிலாகவே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆனால் கொண்டுவரப்பட்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் ஓரிரு சாதகமான விடயங்கள் இருந்தாலும் அதிகமான விடயங்கள் பயங்கரமானதாகவே இருக்கின்றன.

குறிப்பாக ஆட்சியாளர்களுக்கு பயங்கரவாதம் என்றால் என்ன என தங்களுக்குத் தேவையான முறையில் வரைவிலக்கனப்படுத்தி எதிர் கருத்துடையவர்களை அடக்குவதற்கு, அதேபோன்று ஊடகங்களை, அரசியல் எதிர் கருத்துடையவர்கள், சிவில் அமைப்பினரை அடக்குவதற்கு முடியுமான வகையிலேயே பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் கொண்டுவந்திருக்கிறது. இது ஜனநாயக விரோதம் என்பதுடன் மனித உரிமை மீறும் செயலாகும். அதனால் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக மிகவும் உன்னிப்பாகவும் ஆழமாகவும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.