மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிகரான அரசியல் தலைமைத்துவம் நாட்டில் இல்லை – பொதுஜன பெரமுன

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை முன்னிலைப்படுத்தி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவோம்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிகரான அரசியல் தலைமைத்துவம் நாட்டில் இல்லை என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டுள்ளதால் மாத்திரம் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை 16 தடவைகள் பெற்றுக்கொண்டுள்ள பின்னணியில் வங்குரோத்து நிலை அடைந்துள்ளோம்.

வெளிநாட்டு கடன்களைப் பெற்று அதனை முறையாக செயற்படுத்தாத காரணத்தால் அரசமுறை கடன்கள் பொருளாதார பாதிப்பை மேலும் வலுப்படுத்தியது.

2005 முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வெளிநாட்டு கடன்கள் முறையான முதலீடுகளுக்காக பயன்படுத்தப்பட்டன.

நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு மாத்திரம் பொருளாதார நெருக்கடிக்கு இறுதித் தீர்வாக அமையாது. நிலையான மாற்றத்துக்கான கொள்கைத் திட்டம் பொதுஜன பெரமுன வசம் உள்ளது. கட்சியின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவோம்.

ஜனநாயகம், பொருளாதார மேம்பாடு ஆகிய காரணிகளை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிபந்தனையற்ற வகையில் கட்சி என்ற ரீதியில் ஆதரவு வழங்குகிறோம். ஜனாதிபதிக்கும், பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் நல்லிணக்கப்பாடு காணப்படுகிறது.

நாட்டு நலனுக்காக அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம்.

மறுபுறம் நாட்டுக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் அப்போது எமது அதிகாரத்தை வெளிப்படுத்துவோம் என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுக்கொள்ள வேண்டும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை முன்னிலைப்படுத்தி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவோம். மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிகரான அரசியல் தலைமைத்துவம் நாட்டில் இல்லை. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்